காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 119

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
gandhi murder politics1 - 2026

திகம்பர் பாட்கே பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்த அதே நேரத்தில் வேறொரு ப்ளாட்ஃபார்மில் ஆப்தேயும் நாதுராமும் இருந்தனர்.இது பாட்கேயிற்கு தெரியாது.

கான்பூர் செல்லும் அந்த இரவு வண்டியில் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் அவர்கள் பயணித்தனர்.

பாட்கேயின் ரயில் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்து ,இவர்களின் ரயில் புறப்பட்டது.

இவர்கள் இருந்தது நான்கு ஸ்லீப்பர் கொண்ட உறங்கும் கம்பார்ட்மெண்ட்.

அங்கு இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.

ஆகவே இருவரும் மனம் விட்டு பேச முடிந்தது.

இது பற்றி பின்னாளில் ஆப்தே கார்கரேயிடம் நினைவுகூர்ந்தார்.

‘’ காந்தியை கொல்லும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி எங்கள் மனதை பாதிக்கத்தான் செய்தது ;

ஆனால் எங்கள் உறுதியான தீர்மானத்தை விட்டு விடவில்லை ; எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு–எங்கள் தொழிலுக்கோ,குடும்ப வாழ்க்கைக்கோ திரும்புவது என்பது இனி நடக்கப்போவதில்லை எனத் தீர்மானித்தோம்.

இந்த நிலையில் காந்தியை கொல்லும் முயற்சியை கைவிடுவது எனும் பேச்சிற்கே இடமில்லை ; அது சாத்தியமும் இல்லை ; இன்னொரு முறை முயற்சிக்கலாம் ; வேறு சில ஆட்களை திரட்டலாம் ; நிதி திரட்டலாம்.ஆனால் இதனை மொத்தமாக கைவிடுவதென்பது முடியாது ’’.

நாதுராம் அதிகம் பேசவில்லை.

ஆனால் நான் கூறியதை நாதுராம் முழுமையாக ஏற்கவில்லை என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

அடுத்த நாள் காலையில்தான் அவரின் எண்ண ஓட்டம் என்னவென்பது எனக்குத் தெரிய வந்தது.

நள்ளிரவு கடந்த நிலையில்,நான் அப்படியே உறங்கிப்போனேன்.

சற்றே அமைதிகுலைந்த தூக்கம்தான்.

காலையில் 6 மணி இருக்கலாம்.

பாதி உறக்கத்தில் இருந்தேன்.

‘’ நானா ( ஆப்தேயை அப்படித்தான் நாதுராம் அழைப்பது வழக்கம் ) நன்றாக உறங்கினாயா ? ‘’

நான் ஏதோ முணுமுணுத்தேன்.சற்றே சோம்பலை முறித்துக்கொண்டு தூக்கத்திலேயே பதிலளித்தேன் .

’’ம்..நீ ? ‘’

என் கேள்விக்கு நாதுராம் பதிலளிக்கவில்லை.

அதற்கு பதிலாக அவன் கூறினான் :

‘’ இதை நான் செய்யப்போகிறேன்.எனக்கு எந்த உதவியும் தேவையில்லை.யாருடைய உதவியும் தேவையில்லை.யாரையும் புதிதாகச் சேர்த்து கொள்ளப்போவதும் இல்லை ; யாரை நம்பியும் இறங்கப்போவதில்லை ‘’.

என் கண்கள் இன்னும் மூடியே இருந்தன.ஆனால் நான் சத்தியமாகச் சொல்கிறேன் ,அந்த கணத்தில் காந்தி இறந்துவிட்டதாக நான் உணர்ந்தேன் ‘’.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.