காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 131)

Published:

gandhi godse - 2026

நம் நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வரும் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான போட்டியும் பொறாமை போன்றே காந்தியை ஜனவரி மாதம் 20ந் தேதி கொல்ல முயன்ற விசாரணையின்போதும் நிலவியது.

டெல்லி போலீசார் பம்பாய் போலீசாருக்கு மிக முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொள்ளவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை,’’ நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது ‘’ என்று பம்பாய் போலீசாரும் நடந்துகொண்டனர் என்பதும் உண்மையே.

ஒவ்வொரு நாளும் கிடைத்த புதிய புதிய ஆதாரங்களை டெல்லி போலீசார் பம்பாய் போலீசாருடன் பரிமாறிக்கொள்ளவே இல்லை.

இந்த குளறுபடிகளை நன்கு புரிந்துகொண்ட பாரதத்தின் அன்றைய துணைபிரதமரும் ,உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல்,காந்தி கொலை செய்யப்பட்டதற்கு பிறகு,

புலனாய்வு விசேஷ அதிகாரியாக நகர்வாலா அவர்களை நியமித்தார்.அவரின் கீழ் ஒரு விசேஷ போலீஸ் படை அமைக்கப்பட்டது.

காந்தி மீது ஜனவரி மாதம் 20ந் தேதி நடந்த கொலைமுயற்சிக்குப் பிறகு,பம்பாயில் நகர்வாலாவை சந்தித்த டெல்லி போலீசின் இரண்டு அதிகாரிகளும் படுகேவலமாக நடத்தப்பட்டனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அவர்கள் ஜனவரி மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நகர்வாலாவை மூன்று முறை சந்தித்தனர்.

அவர்கள் சீருடையில் இருப்பதை விரும்பாத நகர்வாலா ‘ பம்பாய் மக்களுக்கு தாங்கள் பம்பாய் வந்திருப்பதை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.

தன்னுடைய உத்தரவின்றி அவர்களாக எந்த விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அவர்களும் அவர்கள் பங்கிற்கு உரியமுறையில் டெல்லியில் தங்கள் தலைமையகத்துடன் உரிய தொடர்பில் இருக்கவில்லை.

டெல்லியிலிருந்தவர்களும் தாங்கள் சேகரித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவில்லை.

டெல்லியில் மெரினா ஹோட்டலில் சலவையகத்திற்கு நாதுராம் கோட்ஸே போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு அந்த சலவையகத்தை சேர்ந்தவர் அந்த ஹோட்டலுக்கு வந்தபோது,40 ஆம் எண் அறையை சேர்ந்தவர் அந்த துணிகளை சலவைக்கு போட்டதாக தெரிவித்தார்.

மொத்தம் மூன்று துணிகள் இருந்தன.
அவற்றில் ‘’ NVG ‘’ என்ற குறியீடு இருந்தன.
அது நாதுராம் விநாயக் கோட்ஸேயை குறிப்பதான குறியீடு.

மதன்லால் பஹ்வா டெல்லி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தன் கூட்டாளிகளில் ஒருவர் ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ வின் ஆசிரியர் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

சலவை துணிகளிலிருந்த குறியீடான ‘ NVG ‘ யுடன் ‘ ஹிந்து ராஷ்டரா ‘ வின் ஆசிரியர் என்பதையும் சேர்த்து அந்ததிசையில் டெல்லி போலீசார் விசாரணையை மேற்கொண்டிருந்திருந்தால் நாதுராம் கோட்ஸேயை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

ஆனால் இந்த திசையில் டெல்லி போலீசார் பயணிக்கவே இல்லை.

அதுமட்டுமின்றி,இந்த தகவல்களை பம்பாயிலிருந்த போலீஸ் அதிகாரி நகர்வாலாவிடம் பகிர்ந்துக்கொள்ளவே இல்லை.

கபூர் கமிஷன் இது பற்றி குறிப்பிடுகையில்,’’ இந்த முக்கியமான ஆதாரமான NVG ‘’ என்ற குறியீடு பற்றி டெல்லி போலீசார் ஏன் ஆராயவேயில்லை,பயன்படுத்தவே இல்லை என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டது.

ஜஸ்டிஸ் கபூர் குறிப்பிடுகிறார் : ’’ காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான்,காந்தி கொலை சதியில் ஈடுபட்டவர்கள் யார் என்றே போலீசாருக்கு தெரியவந்துள்ளது ‘’.

ஜனவரி மாதம் பிற்பகலில்,நகர்வாலாவை சந்தித்த இரண்டு டெல்லி போலீஸ்காரர்களும் ,தங்களை பூனாவிற்கு சென்று புலனாய்வுத்துறையின் உதவி துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராவ்சாஹிப் குர்துவை சந்திக்கும்படி தங்களுடைய டெல்லி மேலதிகாரிகள் கூறியிருப்பதாக நகர்வாலாவிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அந்த பூனா அதிகாரியை சந்தித்திருந்தால் ,நாதுராம் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிந்திருக்கும்.

ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நகர்வாலா ,அந்த இருவரையும் உடனடியாக டெல்லி திரும்பும்படி முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டார்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

~ எழுத்து: யா.சு.கண்ணன்

Related articles

Recent articles

spot_img