
உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 அன்று உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விவரிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு 1882 இல் மே 31-ஆம் தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக தீர்மானித்தது.
நாகரீக உலகத்தில் புகைபிடித்தல் என்பது பேஷனாக மாறி விட்டது. அதிலும் இளைய சமுதாயத்திற்கு இதில் ஆர்வம் அதிகம்.
புகையிலையை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் ஆபத்துதான். புகையிலை மனித உடல் உறுப்புகளைத் தாக்கி ஆபத்தை விளைவிக்கிறது. நுரையீரலைத் தாக்கி பல பல்மனரி நோய்களை ஏற்படுத்துகிறது. மூளையில் ரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்துகிறது. தொண்டைப் புற்றுநோய், மாரடைப்பு போன்றவற்றுக்கு காரணமாகிறது. அதோடுகூட புகை பிடிப்பவரின் அருகில் இருப்பவருக்கும் அவர் இழுத்து வெளிவிடும் புகையால் ஆபத்து அதிகம் உள்ளது.
புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று சிகரெட் பெட்டி மீது எழுதப்படுகிறது. ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் புகை பிடித்துக் கொண்டு ஏதோ சொர்க்கத்தை அனுபவிப்பது போல ஊதி மகிழ்கின்றனர். தான் கெட்ட குரங்கு காட்டையும் கெடுத்தது போல தான் பிடிக்கும் புகையால் சுற்றி உள்ளவர்களையும் நோய்க்கு உள்ளாகிறார்கள் இவர்கள். ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது ஏதோ உயர்ந்த செயல் என்பது போல் சினிமா ஹீரோக்கள் பிடிப்பதைப் பார்த்து ரசிகர்களும் அதில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகை பிடிக்கும் பிரச்சனை உலகமெங்கும் உள்ளது.
புகையிலை எதிர்ப்பு தினத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் நடத்தினாலும் பலன் இருப்பது போல் தெரியவில்லை. சிறுவர்கள் கூட தற்போது புகை பிடிக்கிறார்கள்.
விதைமின்றி முளை வராதல்லவா? புகையிலை உற்பத்தி, சிகரெட் தயாரிப்பது போன்றவை இல்லாவிட்டால் புகை பிடிப்பதும் இருக்காதல்லவா? அதை விட்டுவிட்டு பெட்டியில் எழுதி வைத்து விற்பனை செய்வது வினோதமாக உள்ளது. அதை சாகுபடி செய்பவர்களும் சிகரெட், பீடி சுற்றும் தொழிலாளர்களும் மக்களுக்கு நலம் அளிக்கும் வேறு உருப்படியான வேலைகளில் ஈடுபட்டால் இந்த புகையிலை எதிர்ப்பு தினத்திற்கு ஒரு பொருள் இருக்கும்.
சிகரெட், பீடி, சிகர், ஹுக்கா, குட்கா மெல்லுதல் போன்றவற்றுக்காக புகையிலை பல வடிவங்களில் விற்கப்படுகிறது. நிகோடின் என்பது இதில் உள்ள முக்கியமான விஷப் பொருள். இதுவே புகை பிடிக்கும் போதைக்கு மக்களை அடிமையாக்கி புகைப்பிடிப்போரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
கோவிட் 19 பரவுதலுக்குக் கூட புகை பிடித்தல் காரணமாக உள்ளது. கோவிட் நுரையீரலைத் தாக்கும் என்பதால் புகை பிடிப்பவர்கள் அல்லது வேப் செய்பவர்களுக்கு தீவிர ஆபத்து விளைவிக்கும்.
ஆண் மலட்டுத்தன்மைக்கு புகைபிடித்தல் ஒரு காரணம். பெண்களில் கருச் கருச்சிதைவுக்கும் கர்ப்பப்பை கேன்சருக்கும் புகையிலை காரணமாகிறது.
புகை பிடிப்பதில் இருந்து விடுபட நினைப்பவர்கள் மருத்துவரை அணுகி புகையிலையில் இருந்து வெளிவர கவுன்சிலிங்கில் பங்குபெற வேண்டும்