October 15, 2024, 3:02 AM
25 C
Chennai

கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜயந்தியும்!

srikrishna sengottai

கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து அறிவோம்

கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.

கோகுலாஷ்டமி-கிருஷ்ண ஜெயந்தி : வித்தியாசம்

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் – பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

2 விதமான ஆகமங்கள் : இதிலும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் – முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீவைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள்
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.

கிருஷ்ணருடைய விளையாட்டுகள் : இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள். இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.

ALSO READ:  செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

அரிசி மாவினால் பாதம் போடுவது வழக்கம். அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு. ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் – விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்.

கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதை: இப்போது நாம் கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதைகளை பார்க்கலாம். ஒருமுறை நாரத முனிவர் உலக நன்மைக்காக சத்தியலோகம் சென்று பிரம்மதேவரிடம், ”பிரம்ம பிதாவே ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று விரதம் அனுசரிக்கும் முறையையும் விரதத்தை ஏற்றி செய்தவர்களின் பலன்களையும் விரத மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி நான் அறிய விரும்புகிறேன். தயவுகூர்ந்து இதைத் தாங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

ALSO READ:  செப்.5ல் வெளியாகிறது விஜய்யின் ‘கோட்’

அதற்கு பிரம்மதேவர் தன் குழந்தையாகிய நாரதரிடம் இந்த பூஜையை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இந்த பூஜையானது சிவ-விஷ்ணு பக்தர்களும், பெண்களும், ராஜாக்களும் ஜாதி மத பேதமின்றி அனுஷ்டித்து பகவானுடைய அருளுக்கு பாத்திரமாக தோடு பாவங்கள் விலகி முடிவில் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பதாகும். இந்த விரதம் கலியுகத்தில் ஜனங்களுக்கு நேரடியான எல்லா பாவங்களையும் அழிக்கக்கூடியது. நன்மைகளையும் கொடுக்கக்கூடியது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்த அளவில் 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும். ஜெயந்தி தினத்தில் விரதம் ஏற்று உபவாசமிருந்து பூஜை செய்தபின் மகா பாவங்கள் நீங்குவதோடு அஸ்வமேத யாகமும் கீர்த்தனங்கள் செய்த பலனும் ஆயிரம் காராம் பசுக்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள் யானைகள் செய்த தானங்களை செய்த பலனும் அளவற்ற ஆபரணங்கள் குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும் கோடி கோதானம் தன் எஜமானனுக்கு சந்தேகத்தால் செய்த தொண்டுகள் ஏற்படும் .

பவுர்ணமி அமாவாசை தினங்களில் பெரியவர்களை உத்தேசித்து செய்த புண்ணிய நதியில் நீராடியது மற்றும் தர்ப்பணங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். இந்த விரதத்தின் மூலமாக நமது எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். ஆகையால் கிருஷ்ண பெருமான் முன் பக்தியோடு மூன்றே முக்கால் நாழிகை பூஜை செய்ய அவர்களுடைய பாவங்களெல்லாம் விலகும்.

அதிலும் ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் இந்த விரதத்தை ஏற்றுச் செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி போகும். மேலும் தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு வித புருஷார்த்த பலன்கள் நமக்கு கைகூடிவரும்” என்று பிரம்ம பிரான் கூறுகிறார்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி பூஜையை எப்படி செய்யலாம்?

இனி நாம் இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று காலை வீட்டினை தூய நீரினால் அலம்பி விட வேண்டும். சுத்தம் செய்தபின் வீட்டில் வண்ண கோலங்கள் இட்டு நம்மால் முடிந்த கிருஷ்ணருடைய சிலை தங்கம் அல்லது வெள்ளி அல்லது பஞ்சலோகத்தால் ஆன கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்து அல்லது கிருஷ்ணனுடைய படத்தை வைத்து அதற்கு அலங்காரம் செய்து ஆவாகனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

ALSO READ:  ஆக.27 நாளை மதுரை - தாம்பரம் ஒரு வழி சிறப்பு ரயில்!

குழந்தையில்லாதவர்கள் இந்த பூஜை செய்தால் கிருஷ்ணரே பிறப்பார் என்பது நம்பிக்கை.

பலவிதமான பக்ஷணங்கள் – வெண்ணை அனைத்து விதமான பழங்கள் இவையெல்லாம் நிவேதனம் செய்து இரவு பஜனை பாட்டு வாத்தியங்களுடன் நாம் பூஜிக்கவேண்டும். மறுநாள் காலையில் சுத்தமாக நீராடி அந்த பூஜையை நாம் முடித்து விட்டு நம்மால் முடிந்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தியை பொறுத்தவரை சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப ரொம்ப விசேஷம். அதுவும் முக்கியமாக குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தை செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது ஒரு நம்பிக்கை.

பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்கள் என்னென்ன?

இந்த பூஜையில் முக்கியமாக பாரிஜாதம் நந்தியாவட்டம் தாமரை ஆகிய புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது விசேஷம். அதுபோல துளசி இலைகளால் அர்ச்சனை செய்வதும் நமக்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பாகவதம் படிப்பது விசேஷம். அதிலும் அந்த பாகவதத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ண ஜனனம் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்து நம் வாழ்வில் முன்னேறுவோம்.

இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய வாழ்த்துகள்.

– Aparna Sankaranarayanan..

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week