
இது ஒரு #காக்காவின்கதை
காக்கையை ‘ஆகாய தோட்டி’ – அதாவது பறக்கும் ‘துப்புரவாளன்’ என்பர். ஆனால் ஸ்ராத்தம் முதலியன செய்யும் சமயம் #’வாயசபிண்டம்’ அதாவது காக்காவிற்கு உருண்டை வைக்கிறோம். அது தவிர சிலருடைய வீடுகளில் சாப்பிடுவதற்கு முன்னம் காக்கைக்கு சாதம் வைப்பதுண்டு. இது எதனால் தெரியுமா?
ராமாயணம் உத்தரகாண்டத்தில் இதற்குரிய விடையுள்ளது. ஒரு சமயம் ராவணன் திக்விஜயம் செய்தான். அப்போது மருத்தன் எனும் சிறந்த அரசன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவனது யாகத்தில் இந்த்ரன், வருணன், யமன் முதலிய தேவர்கள் நேரிடையாகக் கலந்து கொண்டனர். திக்விஜயம் செய்த ராவணன் மருத்தனுடன் சண்டைக்கு வந்தான். யாக தீக்ஷிதனாக அதாவது வ்ரதமுடையவனான காரணத்தால் மருத்தன் சண்டைக்கு வரவில்லை.
அப்போது அவன் கண்களில் படாமல் தேவர்கள் பறவையுருக்கொண்டு மறைந்திருந்தனர். இந்த்ரன் மயிலாகவும், வருணன் ஹம்ஸமாகவும், யமன் காகமாகவும் மாறியிருந்தனர். ராவணன் சென்றதும் அவர்கள் தங்கள் சுயரூபம் கொண்டனர். பின்னர் அந்த பறவைகளுக்கும் வரமளித்தனர்.
அதில் காக்கையுருக் கொண்ட யமன் காகங்களுக்கு வரமளித்தான். அதாவது காகங்களுக்கு நோயே வராது. பறவைக் காய்ச்சல் முதலிய நோய்கள் காகங்களை அணுகாமையைக் காண்க.
மேலும் மனிதர் பிடித்தாலல்லது அவைகளுக்கு மரணமில்லை. ஒரு சில இனத்தவரால் ஆகாரத்திற்காக அவை கொல்லப்படுவதைக் காணலாம்.
இவையனைத்தையும் விட மிக முக்கியமாக யமலோகம் முதலிய லோகத்திலுள்ள முன்னோர்களுக்கு பசி தீர காகங்களான உங்களுக்கு அன்னமிடுதல் அவசியமானது என்றான்.
இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.
#குறிப்பு: எதுவாகவிருந்தாலும் முதலில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்வது மிக முக்கியம். அதை மறக்கலாகாது.
கட்டுரை: ஸ்ரீ உ.வே. ஏபிஎன் ஸ்வாமி (ந்ருஸிம்ஹ ப்ரியா இதழில்)



