திருமலை ஆலயத்தில் இருப்பது யார் ? திருமலை ஆலயத்தில் இருப்பது மாலவனா ? அம்பிகையா ? சர்ச்சை இருந்து வருகிறது. தொல் தமிழிலக்கியமும், ஆழ்வார்களும் பாடிய வண்ணம் திருமலையில் உறைவது மாலவனே என்பது தெளிவு.
திருமலை ஆனந்த நிலைய விமானத்தில் இருப்பது அம்பிகையின் வாஹனமான சிம்மம், ஆகவே ஆலயம் அம்பிகையினுடையது என்பது ஒரு வாதம். வைணவ வைகாநஸ ஆகம மரபை ஒட்டி சிம்மம் அமைகிறது.
பாலாஜி – ‘பாலா’ அம்பிகையின் பெயர், ஆகவே மூலஸ்தானத்தில் இருப்பது அம்பிகை எனும் வாதமும் ஆதாரமற்றது.
திருமகள் மார்பில் உறைவதால் வெள்ளிக்கிழமை அபிஷேகம்; மஹா லக்ஷ்மிக்கு ‘பில்வ நிலயா’ என்று திருநாமம் , ஆகவே பில்வார்ச்சனை. தனிக்கோயில் நாச்சியார் திருமலையில் இல்லாத காரணத்தால் பெருமாள் கருவறையிலேயே பிராட்டிக்கான ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
திருவரங்கத்தில் பெரிய பிராட்டியார் ஸந்நிதி அருகில் வில்வ மரம் இருப்பதைக் காணலாம். நவராத்ரி உத்ஸவம் விண்ணகரங்களில் மஹாலக்ஷ்மிக்கும் நடைபெறு கின்றன. புரட்டாசியின் ச்ரவணம் திருமலையப்பனுக்குரியது, அதை ஒட்டி ‘ப்ரஹ்மோத்ஸவம்’ அமைகிறது.
‘அகலகில்லேன் இறையும்’ என மாலவனின் திருமார்வில் உறையும் திருமகளின் நாமத்தை ஒட்டியதான ‘ஸ்ரீநிவாஸன்’ வாஸம் செய்வது இத்தலச் சிறப்பு. வல்லப மரபின் வைணவர் சூட்டிய பெயர் ‘பாலாஜி’
மஹாப்ரபு வல்லபாசார்யர் [15 – 16 நூற்] பாரதம் நெடுகிலும் தல யாத்திரை செய்து பாகவத உபந்யாஸங்களை நிகழ்த்தியவர். அந்தப் புனிதமான இடங்களை ஸ்ரீவல்லப மரபின் வைணவர் ’பைடக்’ என அழைப்பர். தமிழில் ‘அமர்வு’ என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு 84 அமர்வுகளை மிக முக்கியமாகக் கொள்வர் புஷ்டி மார்கீய வைணவர்கள். திருவேங்கடம், திருவரங்கம்,ராமேசுவரம், நெல்லை [பொருனை ஆற்றின்கரை], திருவநந்தபுரம், வற்கலை, நாங்குநேரி போன்ற தென்னகத் தலங்களும் இவற்றுள் அடக்கம்.
மொத்தம் 84 பைடக்குகளில் திருமலை 38ம் அமர்வாகக் கணக்கிடப்படுகிறது.
३८.तिरूपति श्री महाप्रभुजी बैठक
कर्नाटक धर्मशला छत्रम् के पास, गांवतिरूमाला, पो. तिरूपति (आन्ध्रप्रदेश)
https://www.nathdwaratemple.org/content/mahaprabhuji/baithaks
வல்லபாசார்ய மரபினர் பால கிருஷ்ணனை வழிபடுவர். ஆகவே வடபுலத்தவர் வேங்கடவனை ’பாலாஜி’ என அழைக்கத் தொடங்கினர். மிகவும் பிற்காலப் பெயர்.
வல்லபரின் இந்த பைடக் தற்போது வசதியான அறைகளுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தர்மசாலைக்கருகில் அருங்காட்சியகம் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது.
‘பாலாஜி’ என்னும் மராட்டியப் பெயரின் அடிப்படையில் , திருமலையப்பன் சொல்லப்படுகிறான் எனும் வாதமும் செல்லுபடியாகாது; பல்லாள் என்பதன் சுருக்கமே ‘பாளா’ ‘பாளா ஜீ’ ‘பாளா சாஹேப்’ எனும் மராட்டியப் பெயர்கள். ‘பல்லாள்’ கன்னட, மராட்டியப் பிராந்தியங்களின் குடிப்பெயர்; தமிழ் வல்லாள் என்பதன் திரிபு.
மதுரை கூடலழகர் விமானத்திலும் சிம்மம் உள்ளது என்பது பலரின் கவனத்துக்கு வருவதில்லை. இணைப்பாக விமானப் படங்கள்.இரு படங்களிலும் மேற்கலசத்திலிருந்து அடுத்த நிலையைக் கூர்ந்து கவனிக்கவும். விமானம், மதில்களில் சிம்மம் நிறுவுதல் வைகாநஸ மரபு.
’மூவராகிய மூர்த்தி’ என வைணவர் வெளிப்படையாகப் பெயர் சூட்டியுள்ள திருமேனி திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.சிரஸில் ஜடாபாரமே தேவநாதனுக்கு உள்ளது.
‘தாழ்சடையும், நீண்முடியும், ஒண்மழுவும், சக்கரமும்….’ பாடலை ஒரு சான்றாகக் காட்டுவர். ஆனால் இதுபோல் நம்மாழ்வார் பாடல் ஒன்றும் உண்டு; –
”தடம்புனல சடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும் உடம்புடையான்..”
”ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளும் தனியுடம்பன்……” மற்றுமொரு பாசுரம். ஆனால் இதுபோன்ற பாடல்கள் திருமலை மூல மூர்த்தியை நிர்ணயிப்பதில் சான்றாகா. மாலவனின் தன்மையைப் பொதுவில் புகழும் பாடல்கள் இவை.
சிலம்பின் விவரிப்பில் வேங்கடவன் –
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இரு மருங்கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்கு விற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்விற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் ….
மராட்டிய மாநிலத்தின் பாலாஜி மந்திர் [மெஹகர்] -https://www.youtube.com/watch?v=0-r5ulSUy2U
இந்த ஆலயம் புதியதானாலும், மூர்த்தி பழமையானது. 11 அடி உயரம் இதில் காணப்படுவது மாலவனே !
திருமலையப்பனுக்கு புஜங்களில் நாகாபரணம் உள்ளது; ஆகவே அது சிவ மூர்த்தம் என்பர். அதுவும் தவறு; காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கும் நாகாபரணம் உண்டு. திரு அயிந்தை தேவநாதர் முக்கண்களும், சடாபாரமும் கொண்டு விளங்குகிறார். ஏனோ திருமலையப்பன் மட்டும் சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டு விட்டார் !
ஒப்பிலியப்பன் 22 முழப் பட்டாடை அணிகிறார்; ஸ்ரீ ரங்கபட்டணம் பெருமாளும் அவ்வாறே. ஆக்ருதிக்குத் தகுந்த ஆடை.
திருமலை விமானத்தில் இருப்பது பல்லவர் சின்னம் சிம்மம் , என்னும் வாதமும் உள்ளீடற்றது. டாக்டர்@Sankara Narayanan G அவர்கள் தரும் தகவல்கள் சில :
வைகாநஸ ஆகமப்படி விண்ணகர விமாந சிகரங்களில் சிம்மம் அமைந்திருப்பது மரபுதான்.
இன்று நாம் காணும் திருமலை ஆலயத்துக்கும் பல்லவர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. பல்லவர் அமைத்த எந்த ஒரு ஆலய விமான சிகரத்திலும் சிம்மம் கிடையாது.
தந்திவர்ம பல்லவன் காலத்திய விமாந சிகரங்களில் பூதங்கள் மட்டும் இடம்பெறும்; அவற்றுக்குப் பெயர்களும் இருந்தன. திருமலை ஆலயத்தில் பல்லவர் கல்வெட்டு ஒன்றுகூடக் கிடையாது. தற்போது நாம் காணும் திருமலை ஆலயம் பிற்காலச் சோழர் பாணி; அது 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது.
விமானத்தின் க்ரீவத்தின் கோணங்களில் பூதங்களையாவது அந்தந்த தேவதைகளின் வாஹனங்களையாவது அமைக்கலாம். நான்கு கோணங்களில் – விதிக்குகளில் அமைய வேண்டிய பூதங்களின் பெயர்கள் ஆமோதன், ப்ரமோதன், ப்ரமுகன் மற்றும் துர்முகன். இந்த பூதங்களை இரு அமர்ந்த ரிஷபங்களின் நடுவிலும் அமைக்கலாம். க்ரீவாவில் அமைந்த பழமையான பூதங்களை மல்லைக் கடற்கரைகோயிலில் காணலாம். க்ரீவா கோணத்தில் மட்டுமின்றி கூட மண்டபத்தின் திருப்பங்களிலும் அமைக்கலாம். திருமாலின் கோயிலானால் கருடனை அமைக்கலாம். வைகானஸ ஆகமம் ககேந்த்ரம் வா ம்ருகேந்த்ரம் வா என்று பறவையரசனான கருடனையோ அல்லது விலங்குகளின் அரசனான சிங்கத்தையோ அமைக்கச் சொல்லியிருக்கிறது. திருப்பதியிலும், காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலிலும் இவ்வகைச் சிங்கங்கள் இருப்பதைக் காணலாம். இந்தச் சிங்கங்களை வைத்து எழும் சர்ச்சை தேவையற்றது. (Sankara Narayanan G)




