பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை.
பற்கள் முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக்கொள்ளும். ஆகவே, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத் தருணத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், வலி போன்றவையும் ஏற்படலாம். இது பொதுவான பிரச்னைதான் என்றாலும், பல் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க, அனுமதிக்கக் கூடாது. இதனால், பாக்டீரியா பரவி பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை நர்சிங் பாட்டில் கேரிஸ் (Nursing bottle caries) என்பார்கள். எனவே, பால் குடித்ததும், வாயைச் சுத்தம்செய்வது அவசியம். பாலுக்குப் பிறகு, தண்ணீர் கொடுத்தோ அல்லது ஈரப் பஞ்சினால் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால், பற்சிதைவு தடுக்கப்படும்.
கூடுமானவரை குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளைக் குறைந்த அளவே கொடுப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, அவர்களின் உடல் நலத்துக்கும் பற்களின் பாதுகாப்புக்கும் நல்லது.
பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தரப் பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth Bud) உள்ளது. பல் மொட்டு வளர வளர, பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பற்கள் விழுந்துவிடும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் வளரத் தொடங்கும். நிரந்தரப் பற்களின் சரியான வளர்ச்சிக்கு, குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம்.
நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியை வாங்கித் தரும் பெற்றோர், சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது. குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும்.
எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவ்வேண்டும் சத்தான உணவு கொடுங்க ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும், மென்று சாப்பிடக் கூடிய வகைகளையுமே தேர்ந்தெடுக்கவும். சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப் படாத பானங்கள், ஜூஸ், மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்களை முற்றிலும் தவிர்க்கவும். ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங் கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இளவயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம்.
சொத்தை பற்கள் குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும். இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டித் தெளிவு படுத்திக் கொள்ளவும்.
வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது.
குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.
குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை
சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள்.
பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில், தாய்ப்பால் குடித்துக் கொண்டே துாங்குவது, பால் பாட்டிலை வாயில் வைத்து சப்பியபடி இருப்பதை பழக்கவே கூடாது. பல் சொத்தை ஏற்படுத்துவதில் பிரதானமாக இருப்பது, இந்த பழக்கங்கள்.தொடர்ந்து இதுபோல் இருந்தால், பால் பற்கள் அனைத்திலும் சொத்தை ஏற்பட்டு, இரண்டு வயதாகும் போது, ஒரு பல்கூட மிஞ்சாது. சொத்தையால், பற்களின் நிறம் மாறி, கறுப்பாக இருக்கும்.
பொதுவாக, முதல் இரண்டு ஆண்டுகளில், பெரிதாக பிரச்னை எதுவும் வராது. பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது தான், பிரச்னை இருப்பது தெரிய வரும்.பல்லில் சொத்தை அதிகம் இருந்தால், பல்லை எடுத்து விட்டு, அந்த இடத்தில், பெரியவர்களுக்கு செய்வது போல், ‘ரூட் கேனால்’ சிகிச்சையில், ஈறுகளின் உள்ளே, பல்லின் அடி பகுதியில், சொத்தை ஏற்பட்ட பகுதியை சரி செய்து, அந்த இடத்தில், ‘கேப்’ போட வேண்டும்.காரணம், சொத்தை இருந்த பல்லை, 2வயதில் எடுத்து விட்டால், அந்த இடத்தில் நிரந்தரமான பல், 6 வயதில்தான் முளைக்க ஆரம்பிக்கும்.
அதுவரை, அந்த இடம் இடைவெளியுடன் இருந்தால், பக்கத்தில் வளர வேண்டிய பல்,அந்த இடத்தில் மாறி முளைப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், சீரான வரிசையில் பற்கள் இல்லாமல் இருப்பது, முன் பக்கம் துாக்கலாக முளைப்பது, ஒரு பல் மேல் இன்னொரு பல் போன்ற பிரச்னைகள் வரலாம்.ஆறு மாதத்தில் துவங்கி, 12 வயது வரை, ஒவ்வொரு பல்லும் குறிப்பிட்ட வயதில் விழுந்து, அந்த இடத்தில் நிரந்தர பற்கள் முளைக்கும்.
எந்த வயதில், எந்த பல் விழ வேண்டுமோ, அந்த வயதில் தான் விழ வேண்டும். பல்லை எடுப்பதும், அது விழ வேண்டிய வயதில் தான் எடுக்க வேண்டும். முன்போ, பின்போ எடுக்கக் கூடாது. சொத்தை அதிகமாகி, வேறு வழியில்லாமல், சொத்தைப் பல்லை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பல் எடுத்த இடத்தில், அதன் பக்கத்தில் உள்ள பல் நகராமல் இருப்பதற்கான, ‘ஸ்பேஸ் மெயின்டனன்ஸ்’ செய்ய வேண்டியது கட்டாயம்.இதுதவிர, சொத்தை இல்லாவிட்டாலும், எந்த வயதில் பால் பல் விழுந்து, நிரந்தர பல் முளைக்க வேண்டுமோ, அந்த வயதில் தான் முளைக்க வேண்டும். அப்படி விழாத பட்சத்தில், அந்த இடத்தில் முளைக்க வேண்டிய நிரந்தர பல், முளைக்க இடம் இல்லாமல், நாக்கை ஒட்டியோ, ஈறுகளின் பக்கவாட்டில், உள் பக்கம் அல்லது வெளிப் பக்கமாகவோ இடம் மாறி முளைக்கலாம். பால் பற்கள் இருக்கும் போதே, பல் சொத்தை இல்லாமல், ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிரந்தரப் பல் முளைக்கும்.