
கண் சிவப்பு மாற…
வடித்த சாதத்தை சுடச் சுட ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிய மூட்டையாக கட்டி இளஞ்சூட்டுடன் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறிவிடும்.
விக்கல் சரியாக…
உடல் பலவீனத்தால் சிலருக்கு விக்கல் ஏற்படும். ஆளி விதையைத் தூள் செய்து அதைப் போல் எட்டு பங்கு நீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து அரை அவுன்ஸ் வீதம் காலை, மாலை இரண்டு நாள்கள் சாப்பிட விக்கல் நின்றுவிடும்.
பித்தம் சரியாக…
மூன்று தேற்றான் விதையை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துச் சாப்பிட பித்தம் சரியாகும்.
கொதிக்கும் வெந்நீரில் ஒரு ரூபாய் எடை தனியாவை உடைத்துப் போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு வடிகட்டி காலை, மாலை 40 நாள்களுக்கு சாப்பிட்டு வர பித்த சாந்தி ஏற்படும்.
சுக்கு, தனியா இரண்டையும் தட்டிப் போட்டு அதே அளவு பனங்கற் கண்டு சேர்த்து ஆழாக்குத் தண்ணீரில் போட்டு அரை ஆழாக்காக சுண்டக் காய்ச்சி வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட பித்த கிறுகிறுப்பு சரியாகும்.
பித்த வெடிப்புக்கு…
சுண்ணாம்பையும், சிற்றாமணக்கெண்ணெயையும் ஒன்றாக சேர்த்துக் குழப்பி இரவு படுக்கைக்கு முன் கால் வெடிப்புகளில் பூசி காலையில் அலம்பி விடவும். நாலைந்து நாள்களில் நல்ல குணம் தெரியும்.
புளியேப்பம் நீங்க…
அரை ரூபாய் எடை சுக்கை தட்டி சட்டியில் இட்டு அத்துடன் இரண்டு ஸ்பூன் சீரகத்தை தூள் செய்து ஒரு ஆழாக்குத் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டுடன் குடிக்க ஒரு மணி நேரத்தில் நல்ல குணம் தெரியும். பசியும் உண்டாகும்.