உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .
உடல் உறுதிக்கு பல பயிற்சிகள் உள்ளன. உடல் தூய்மைக்கு இயற்கை மருத்துவத்தில் ஒரு சில பயிற்சிகள் உள்ளன.
அதில் கண் கழுவுதல் குறித்து திருச்சி அமிர்தா யோகமந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
அவ்வகையில் கண்களை பேணிக்காப்பது இன்றியமையாதது ஆகும். நவநாகரிக உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளாலும் சுற்றுச்சூழல் மாசுகளாலும் காற்றில் மாசுகள் உள்ளன.
சாலையில் நடந்து சென்றாலோ, இருசக்கர வாகனத்தில் சென்றாலோ,பேருந்து பயணம் சென்றாலோ காற்றில் கலந்துள்ள மாசுகள் முகத்தில் படுகின்றன. மூச்சுக் காற்றிலும் கலக்கின்றன. அதுமட்டுமின்றி கண்களிலும் பரவுகின்றன.
உடல் மேல் உள்ள மாசுக்களை குளித்து தூய்மை செய்யலாம். கண்களில் உள்ள மாசுகளை அகற்ற இயற்கை முறையில் உள்ள கண் கழுவுதல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பயிற்சியை மேற்கொள்வதற்கு கண் குடுவையை கையில் எடுத்துக்கொண்டு முதலில் குடுவையிணை தூய்மையாக கழுவிக் கொள்ள வேண்டும். தூய்மையான குடிநீரை கண் குடுவையில் நிரப்பிக் கையில் செங்குத்தாக வைத்துக் கொண்டு தலையை குனிந்து குடுவை மீது கண்களை வைத்தல் வேண்டும்.
அப்பொழுது குடுவையில் உள்ள நீரானது கண்களில் படும் .கண்களை திறந்து திறந்து மூட வேண்டும். இப்பயிற்சியினால் கண்களில் உள்ள மாசானது நீரில் வந்துவிடும் .இதேபோல கண் குடுவையில் புதிதாக தூய நீரை நிரப்பி அடுத்த கண்ணையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
கண்களை கழுவுவதால், கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. புத்துணர்வு வருகிறது. கண்கள் குளிர்ச்சி அடைகிறது .கண்களில் உள்ள தூசி முதலியன வெளியாகின்றன என்றார்
– யோகா விஜய், திருச்சி