புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் படையினர் பாதுகாப்பே தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் படையை நியமிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று எதிர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றம், 15-12-2011 அன்று வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த வகையான இடையூறும் ஏற்படாது என்று கேரள தலைமைச் செயலாளர் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை. அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் கேரள அரசு செயல்பட்டுவருகிறது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கேரள அரசு செயல்படுவதாகக் கூறினாலும், அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. அணை பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த பதிலில் கேரள அரசு கூறியுள்ளவை ஏற்புடையதல்ல. அவை அனைத்தையும் மறுக்கிறோம். எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு முன் நடைபெறும்.
Popular Categories