
பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஏழ்மையான தோற்றம் இந்திய மக்களால் நன்கு அறியப்படக் காரணமாக இருந்தது அவரது தேநீர்க் கடை! ஏழை மக்களுடன் ஏழைகளில் ஒருவராக அவர் தன்னை இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியே தனது கடந்த காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழையாக இருதாலும் நாட்டுப் பற்றும் தியாக உணர்வும் குறிக்கோளை அடையும் கடின உழைப்பும் இருந்தால் நாட்டின் தலைமைப் பதவியில் அமரலாம் என்பதை வலிறுத்துவதற்காகவே அவர் இதனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதப் பிரதமரின் இளமைக் கால நாட்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருந்தது, தந்தைக்கு உதவியாக அவர் தேநீர் கடையில் பணி செய்த நிகழ்வு!
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தனது இளைமைக் காலத்தில் குஜராத்தில் உள்ள வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். பிரதமர் மோடி, தன் இளமைப் பருவத்தில் கணிசமான நேரத்தை செலவிட்ட டீ ஸ்டாலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது.
அந்த டீஸ்டால் இருக்கும் அதன் ஒருங்கிணைந்த சாராம்சத்தையோ அல்லது அதன் தோற்றத்தையோ மாற்றாமல் ஒரு சுற்றுலாத் தலமாகக் காண ஊக்குவிப்பதே திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சுற்றுலா அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஏற்கெனவே இந்த ஸ்டாலை ஆய்வு செய்துள்ளார், மேலும் அதன் உண்மையான பழைமை வடிவத்தை பாதுகாக்க இதனைக் கண்ணாடியால் மூட வேண்டும் என்றும் கூறியுள்ளார்
பிரதமர் மோடியின் தேநீர் விற்பனை நாட்கள், கடந்த 2014 பொதுத் தேர்தலில் நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்டது. மோடி அரசியல் அதிகாரத்தின் உச்சத்துக்கு வருவதைத் தடுப்பதற்காக, காங்கிரஸின் மணி சங்கர் ஐயர் உள்ளிட்டோர் பலர், மோடி டீக்கடைக்காரர், டீ ஆற்றத்தான் லாயக்கு, நாட்டின் நிர்வாகத்துக்கு சரிப்பட மாட்டார் என்ற கருத்தில் சாய்வாலா என்று பிரசாரம் செய்தது.
ஆனால் மோடியோ, சாய் பே சர்ச்சா -என டீக் குடித்துக்கொண்டே விவாதம் என அதனை மாற்றினார். காங்கிரஸார் தன் மீது சுமத்திய சாய்வாலா – டீக்கடைக்காரர் என்ற இமேஜை, தான் ஏழைகளில் ஒருவன் என்று மக்களிடம் எடுபட வைத்தார்.

அவருடைய ஏழ்மையான நாட்களால்தான், அவரால் சாமானியர்களின் அவல நிலையைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தோட்டத்தை நாட்டு மக்களின் உள்ளங்களில் அது விதைத்தது. இதனை குறிப்பிட்ட மோடி, நாடு முழுவதும் பல ரசிகர்களைக் கண்டுபிடிக்க காங்கிரஸாரின் இந்தப் பிரசாரமே உதவியது என்று கூறினார்.
காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகளைத் தாக்கும் போது, தாம் தேநீர் விற்ற நாட்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எனது மோசமான தோற்றம் காரணமாக காங்கிரஸ் என்னை விரும்பவில்லை. ஒரு கட்சி இவ்வளவு தாழ்ந்திருக்க முடியுமா? ஆம், ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகிவிட்டார். இந்த உண்மையை அவர்கள் உணராமல், என்னை அவமதிப்பதை அவர்கள் மறைக்கத் தவறவேயில்லை.
ஆம், நான் தேநீர் விற்றேன்; ஆனால் தேசத்தை விற்கும் பாவத்தை நான் செய்யவில்லை,” என்று அவர் கடந்த காலத்தில் கூறிவந்தார். சாய்வாலா என்ற இமேஜ் 2014ல் கைகொடுத்தது. 2019ல் காவல்காரன் என்ற சௌக்கிதார் இமேஜ் மோடிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது!



