
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள அய்னாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் தன்னுடைய மகன் ராம்சரணின் ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர். ரவியின் மகன் பிறந்தநாளுக்கு ஸ்ரீநிவாஸ் கேக் ஒன்றை அனுப்பியுள்ளார் .
இரவு தந்தை ரவி, தாய் பாக்கியலட்சுமி, சகோதரி பூஜிதா உள்ளிட்ட உறவினர்களின் வாழ்த்து மழையில் சிறுவன் ராம்சரணும் சந்தோஷமாக கேக் வெட்டியுள்ளான். அனைவரும் அதனை உண்டுள்ளனர். சிறிது நேரத்தில் கேக் சாப்பிட்ட நான்கு பேருமே மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் சித்தி பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ராம்சரணும் அவனுடைய தந்தை ரவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் பாக்கியலட்சுமியும், சகோதரி பூஜிதாவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து கொம்முரவேலி காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் காவல் துறையினர். சித்திபேட்டையில் ரவிக்கு சொந்தமான பூர்வீக சொத்து உள்ளது. இதனை பங்கிட்டுக் கொள்வதில் ரவிக்கும், அவருடைய தம்பி சீனிவாசுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி சீனிவாஸ் பிறந்த நாள் கேக்கில் விஷம் கலந்து, உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தையே கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
அவரின் இந்த முயற்சியில் அண்ணன் ரவியும் அவரது மகன் ராம்சரணும் கொல்லப்பட்டுள்ளனர்.
சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கில் ஸ்ரீநிவாஸ் விஷம் வைத்து பழிதீர்த்ததாக குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ரகு கூறும்போது, “கேக்கில் பூச்சிக்கொல்லி மருந்தின் வாடை வீசியது. பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அதே வாடை வீசியதாக கிராம மக்கள் கூறினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது,” என்றார்.
கேக்கில் இருந்தது என்ன மாதிரியான விஷம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகும் விசாரணைக்கு பிறகே முழு தகவல் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



