
புதுவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் காலாட்பட்டு பங்களா தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்.
இவர் பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார்.
காலாப்பட்டுவை சேர்ந்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையில் சேர்க்கப்பட்ட குற்றவாளிகளில் சந்திரசேகரும் ஒருவர் ஆவார்.
. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இவரும் ஜோசப்பை போல் காங்கிரஸில் இருந்தவர் தான். பின்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த குற்றவாளிகளில் ஒருவரான பார்த்திபன் என்பவருடைய மனைவி சித்ரா நேற்று இறந்துவிட்டதால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சந்திரசேகர் தனது மனைவியுடன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த 4 பேர் திடீரென சந்திரசேகர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் குண்டு வெடித்து சந்திரசேகர் கீழே விழுந்தவுடன், அந்த நான்கு பேரும் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக சந்திரசேகரை வெட்டியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக அவரது மனைவிக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து புதுவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோசப் கொலைக்கு பழிவாங்குவதற்காகத் தான் அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



