யாதும் ஊரே யாவரும் கேளிர் – ஐ.நா. அவையில் மோடியின் பேச்சு…! நாடெல்லாம் இதுதான் பேச்சு!

Published:

modi in un council - 2026

ஐ.நா. பொதுச் சபையில் பேசிய பாரதப் பிரதமர் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டி, கணியன் பூங்குன்றனாரின் பெயரை சிறிதும் பிசகாமல் உச்சரித்து, தமிழர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74 வது கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. நேற்று இரவு, ஐ.நா. பொது அவையில் அவர் ஆற்றிய உரை, சமூக வலைத்தளங்களில் பெரிதாக எதிரொலித்தது. குறிப்பாக, பாரம்பரியத் தமிழர்கள் அவரது உரையை மகிழ்ச்சியுடன் சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

அமைதியும் ஒத்துழைப்பும் தான் இந்தியா உலகுக்கு அளித்துள்ள செய்தி என்று கூறிய பிரதமர் மோடி, தனது பேச்சில் புத்தர், விவேகானந்தர், காந்தி ஆகியோரைப் பற்றியும் குறிப்பிட்டு, இந்தியாவின் முகத்தை உலக நாடுகளில் வலுவாகப் பதிய வைத்தார்.

இந்திய நாடு, உலகுக்கு போர்களைத் தரவில்லை, அமைதியை உலகிற்கு உரைத்த பௌத்தத்தையே தந்தது என்று கூறிய மோடி, பயங்கர வாதத்தினால் உலக அமைதி படுகாயம் அடைந்திருப்பதாகக் கூறினார். இத்தகைய சூழலில் உலகமே ஓரணியில் திரண்டு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சியே அரசின் கனவு என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு நன்மையைத் தரும் என்று வலுவாகப் பதியவைத்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

உலகம் எதிர்கொண்டு வரும் பருவநிலை மாற்றம் குறித்த பிரச்னைகள், சவால்கள் குறித்து பேசிய மோடி, தமது அரசு எவ்வாறு அதனைச் சரி செய்ய முயற்சி செய்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது என்றும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினா.

நாட்டில், 50 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய மோடி, 370 மில்லியன் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

உலக வெப்பமயமாதலை தடுக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, புதுப்பிக்க வல்ல எரிசக்தித் துறையை இந்திய அரசு ஊக்குப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், வரும் ஆண்டுகளில் 450 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

குறிப்பாக, உலக நாடுகளுக்கு இந்தியாவின் செய்தி என்ன என்பதை உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழில் குறிப்பிடப் பட்டிருக்கும் சொற்களைக் குறிப்பிட்டு உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.

3000 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகப் பார்த்த நாடு இந்தியா என்று தெரிவித்த மோடி, உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழில் உள்ள வார்த்தைகள் இவை என்று குறிப்பிட்டார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ்ப் புலகர் புறநானூற்றில் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசினார்.

உலகம் யாவையும் தம் குடும்பமே! எல்லாம் எனது ஊரே! எல்லோரும் என் குடும்பத்தினரே என்று பொதுமைப் பார்வையை முன்வைத்தது இந்தியா! வசுதைவ குடும்பகம் என்ற, உலகம் வாசுதேவனாகிய இறைவனின் குடும்பமே என்ற தமது நம்பிக்கையை இந்தச் சொற்களின் மூலம், உலகுக்கு உணர்த்தினார் பிரதமர் மோடி!

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

பிரதமர் மோடியின் இந்த வாசகங்கள் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது. அவரது தமிழ்ப் பேச்சின் காணொளிக் காட்சிகள் சமூகத் தளங்களில் வலம் வருகின்றன.

பிரதமர் மோடியின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” மேற்கோள் குறித்து பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா குறிப்பிடுகையில்…

Narendra Modi ஜி அவர்கள் உண்மையில் தமிழை உலக அளவில் பரப்புகிறார். உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியின் தூதராக உள்ளார். தமிழ்நாட்டின் மீது இந்தி திணிப்பவர் என்று கூறும் போலி தமிழ் போராளிகளுக்கு இந்த காணொளியே சமர்ப்பணம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img