அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சோனியா காந்தி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தி விடுமுறை எடுத்து வெளியில் சென்றுள்ள நிலையில், தொகுதி மக்களை அவருக்கு பதிலாக சோனிய காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேபரேலி, அமேதி தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்றார் சோனியா காந்தி. முன்னதாக, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் உள்ள பச்வார், பந்திப்பூர், சிவ்புரி ஆகிய கிராமங்களுக்கு சோனியா காந்தி சென்றார். அங்கு அவரிடம், திடீர் மழையால் கோதுமை, கடுகு ஆகிய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ததா? என சோனியா காந்தி கேட்டார். அதற்கு அவர்கள், மத்திய அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால் உத்தரப் பிரதேச அரசு அறிவித்த உதவி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட சோனியா காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு, சர்வோதயா, உதர்பாரா கிராமங்களுக்குச் சென்ற அவர், அண்மையில் ரயில் விபத்தில் உயிரிழந்த சிவேந்திர சிங், சிட்ல பிரசாத் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari