
திருப்பதியில் போலீஸார் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும், ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யக் கூடாது என்று தங்களைத் தடுத்ததாகவும், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.
திருப்பதியில் தற்போது நவராத்திரி – புரட்டாசி பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. பிரமோத்ஸவத்தில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த பிரமோத்ஸவத்தின் போது, பக்தர்கள் பலர் கூடி, பஜனைகள் செய்வது, பாடுவது, ஹரி நாம சங்கீர்த்தனம் பாடி இசைப்பது, ஆடுவது என இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக பல்வேறு குழுக்களாக ரத வீதியான நான்கு மாட வீதிகளிலும், மற்றும் ஆலய வளாகத்தின் வெளிப்பகுதியிலும் கூடி பாடுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னையில் இருந்து சென்ற குழுவினரை திருப்பதி போலீஸார் தடுத்ததாகவும், இங்கே பாடக் கூடாது என்று கூறி, தமிழ்நாடுல இருந்து ஏன்டா வர்றீங்கன்னு கேட்பதாகவும் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நான் கிருஸ்த்துவன்தான்… உன்னால் என்ன பண்ண முடியும் என்று கேட்டதாக, இந்தக் குழுவில் இருந்த ஒருவர் குமுறிக் கேட்கிறார்.
தங்களை கொடூரமாக போலீஸார் தாக்கியதாகவும், ஹரிநாம சங்கீர்த்தனம் செய்வோம் என்ற கூறி விடாப்பிடியாக இருந்ததற்காக இந்த தாக்குதலை போலீஸார் நடத்தினர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.