சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றது உண்மை என விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ளபரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.
தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு, சிறை அதிகாரிகள் சிறையில் சகல வசதிகள் செய்து கொடுத்ததோடு, விதிகளை மீறி சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் அழைத்து சென்றதாகவும் காவல் அதிகாரி ரூபா புகார் கூறினார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள வினய்குமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விசாரணைக்குழு இன்று அறிக்கை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில், பெங்களூரு சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் சிறப்பு சலுகைகளைப்பெற சசிகலா லஞ்சம் கொடுத்ததாகவும், சிறையில் சசிகலாவுக்காக சமையல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையின் சிசிடிவி பதிவுகளை கேரள தடயவியல் துறைக்கு அனுப்பி கர்நாடக சிறைத்துறை கருத்து கேட்டுள்ளது.