
தெலங்கானாவில், ஐந்து நாட்களாக தொடர்ந்து நடக்கும் 48,000 ஆர்டிசி தொழிலாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுடன் ரோட்வேஸ் ட்ரான்ஸ்போர்ட் கார்பரேஷன் – ஆர்டிசி.,ஐ இணைக்க் கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து உள்ளது. இதற்கு ஆதரவு தரும்படி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஆர்டிசி ஜேஏசி அழைப்பு விடுத்துள்ளது.
தெலங்கானா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தும் பந்த் ஐந்து நாட்களைக் கடந்துவிட்டது! தொழிலாளர்களும் சரி… அரசும் சரி… தங்களின் பிடிவாதத்தை தளர்த்தாததால் தசரா விஜயதசமி பண்டிகை சமயத்தில் பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளார்கள். சென்ற 5 நாட்களாக பலவித வடிவங்களில் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளது ஆர்டிசி ஜேஏசி.
இந்தப் போராட்டத்தில் அரசு பணியாளர்களும் பொதுமக்களின் பல்வேறு சங்கங்களும் இணைய வேண்டும் என்று விரும்புகிறது ஆர்டிசி ஜேஏசி. இதன் தொடர்பாக புதன்கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அரசாங்கத்தோடு ஆர்டிசியை இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் மேலும் 26 கோரிக்கைகளை வற்புறுத்தி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது இந்த போராட்டம்.
அரசும் பின்வாங்காத நிலையில் தொழிற்சங்கங்கள் மேலும் தீவிர போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. போராட்டம் தொடங்கிய இரண்டாம் நாள் பஸ் டிப்போக்களின் முன்பாக குடும்பத்தோடு சேர்ந்து ஆர்டிசி தொழிலாளர்கள் “பதுக்கம்மா” எனப்படும் தெலங்கானா நவராத்திரி பண்டிகையை கும்மியடித்து கொண்டாடினார்கள்.
பஸ் டிப்போக்களின் முன் விஜய தசமியன்று ‘சமீ’ பூஜை செய்து தொழிலாளிகள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதோடு மாதச் சம்பளம் கூட அரசாங்கம் அளிக்காத நிலையில் அவர்கள் மிகவும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் உள்ளார்கள்.

ஆர்டிசி ஜேஏசி தலைமையில் சோமாஜிகூடா பிரஸ் கிளப்பில் அனைத்து சங்கங்களையும் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து ஜேஏசி கன்வீனர் அசுவத்தாமரெட்டி அறிக்கை வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் உத்தியோகி சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆர்டிசி தொழிலாளர் போராட்டத்திற்கு ஏற்கெனவே காங்கிரஸ், பிஜேபி, டிடிபி இவற்றோடுகூட பல அரசியல் கட்சிகள் ஆதரவு அறிவித்துள்ளன. அதேபோல் ஹுஜூர்நகரில் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு நல்கி உள்ள சிபிஐ கூட தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் தன் வழி முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஹுஜூர் நகரில் வரும் எலக்ஷனில் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டி வரும் என்று அந்தக் கட்சி தலைவர் கூறியுள்ளார். தாம் ஒன்றும் எந்த ஒப்பந்தமும் எழுதிக் கொடுக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் தரப்பில் போராடுவதற்கு சிபிஐ எப்போதும் முன்னிற்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்திற்கு பேராசிரியர் கோதண்டராம், டிடிபி.யிலிருந்து ராவுல சந்திரசேகர், சிபிஐ கட்சிகளின் பல பிரமுகர்கள் ஆஜரானார்கள். மறுபுறம் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. ஆளுநரின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருக்கின்றன.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்கள் வேலையை தாமே இழந்துள்ளார்கள் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இவர்களை எந்தச் சூழலிலும் வேலையில் மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார். ஆர்டிசி ஜேஏசியோடு பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்றார்.
ஆனால் சோமாஜிகூடா பிரஸ் கிளப் மீட்டிங்கில் பங்கு கொண்ட பல கட்சி பிரமுகர்கள் கேசிஆர் வழிமுறையை விமர்சனம் செய்தார்கள். ஆர்டிசி தொழிலாளர்கள் புதிதாக எதையும் கோரிக்கை வைக்கவில்லை என்று சிபிஎம் தலைவர் தம்மிநேனி வீரபத்ரம் தெரிவித்தார்.
தனியார் பஸ் ஆபரேட்டர்களுக்கும் முதல்வருக்கும் இடையே மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். சேவ் ஆர்டிசி ஊர்வலத்தை சிபிஎம் கட்சியினர் நடத்தியுள்ளனர்.



