
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கும் தண்ணீர் இனி நமது விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி . ஹரியானா மாநில தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்
சிந்து மற்றும் 5 துணை ஆற்று நீரை பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று ஆற்று நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், ஜீனாப் ஆகிய ஆறுகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதில் இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீரை காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மூன்று திட்டங்களின் மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது அரியானா மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 21-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநிலத்தின் சார்கிதாரி, குருட்சேத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பேசினார்…
அப்போது அவர் மக்களவை தேர்தலில், அரியானாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்றும் ஹரியானா மாநில மக்களின் அன்பு நம்மை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறினார் …
மேலும் இந்தியாவுக்கு சொந்தமான ஆற்று நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் வழியே வீணாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது அரியானா மாநில விவசாயிகளுக்கு சொந்தமான அந்த தண்ணீர் இனி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
ஆற்று நீரின் மீது அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. இந்த தண்ணீரை பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க, முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்த தண்ணீர் இனி பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா அனுமதிக்காது.
தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும் ஆனால் , நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என்றார் பிரதமர் மோடி



