
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அமிதாப் பச்சன் , கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து நேற்றிரவு அவர் வீடு திரும்பினார்.
அமிதாப்புக்கு கடந்த 1982ஆம் ஆண்டு நடந்த விபத்தின்போது ரத்தம் ஏற்றப்பட்டது. அதில் ‘ஹெபடிடீஸ் பி’ வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது.
கல்லீரல் பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வந்தாலும், சினிமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மும்பை சிட்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அமிதாப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போது, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் இல்லம் திரும்பினார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.



