
இந்திய ராணுவ வீரர்கள் தான் என் குடும்பத்தினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறேன்; தைரியம் வாய்ந்த வீரர்களுடன் கொண்டாடும் போது தீபாவளி இனிக்கிறது என்று காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியபோது, பிரதமர் மோடி பேசினார்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியபோது…
தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது பாரம்பரியம். நான் அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். எனவேதான் தீபாவளி கொண்டாட இங்கே வந்துள்ளேன். தைரியசாலிகளான நீங்கள் தான் என் குடும்பம்.
நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன. ஆனால் நீங்கள் இருக்கும் இந்தப் பகுதி தனித்துவமானது. போர், ஊடுருவல் உட்பட அனைத்தையும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்தப் பகுதி தோல்வியைப் பார்த்திராத பகுதி. வெல்ல முடியாத பகுதி.
தற்போது நேரம் மாறி விட்டது. நமது ஆயுதப் படைகள் நவீனமாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும் நவீனமாக இருக்க வேண்டும். நமது வீரர்களின் முகங்களில் எந்த விதமான அழுத்தங்களும் இருக்க கூடாது என்றார்.
பின்னர் தனது டிவிட்டர் பதிவுகளில், ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவிட்டார். அதில், ராணுவ வீரர்கள் தேசிய பேரிடர் நேரத்தில் ஆற்றும் பங்களிப்பையும், பொது சொத்துகளை அழிவில் இருந்து காத்ததையும் நினைவு கூர்ந்தார்.
ராணுவ வீரர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசியதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.



