
வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது! அது பரவாயில்லை, ஆனால் இதில் திராவிட கட்டுக் கதைகளை இணைத்து, ஈ.வே.ரா.வில் இருந்து தொடங்கி அது வெளியிட்ட அறிக்கைதான் ஒரு வரலாற்றுப் புரட்டு என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.
சென்னை மாகாணத்தை மொழி வழித் தமிழர் தாயகமாக உருவாக்க வேண்டுமென்று முதன்முதலாக அரசியல் அரங்கில் குரல் கொடுத்து போராடியவர் ம.பொ.சி. அதுபோல் தமிழக எல்லைகளை மீட்கப் போராடியவர்களில் முதன்மையானவர்களாக மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தளபதி விநாயகம், குஞ்சன் நாடார் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஆனால் தற்போது, தமிழக அரசு வெளியிட்ட தமிழ்நாடு அரசாணைக் குறிப்பில் பெரியாரிலிருந்து தொடங்கி வரலாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதன்மை எல்லைக் காப்புப் போராளிகள் ம.பொ.சி.யும், நேசமணியும் இறுதியாக வரிசைப் பட்டியலில் வருகின்றனர். இது தமிழக எல்லைக் காப்பு போராளிகளை அவமதிப்பது மட்டுமல்லாமல் வரலாற்றை திரிக்கும் முயற்சியாகும் என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழறிஞர்கள்!
உண்மையில், திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்து, தனித் தமிழ்நாடு மொழி வழித் தாயகமாக பிரிவதை தொடக்கம் முதலே எதிர்த்தவர் ஈ.வே.ரா., ஆனால் வேறுவழி இன்றி இறுதிக் கட்டத்தில் தமிழ்நாடு பிரிவுக்கு ஆதரித்தார். எனவே, அவரை முதல் வரிசைப் பட்டியலில் காட்டுவது வரலாற்றுப் புரட்டு என்று தமிழக அரசைச் சாடுகின்றனர்.
ஈ.வே.ரா., வழியில் அண்ணாதுரையும், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று கூறியவர்தான்! ஈ.வே.ரா., வழியில் கண்மூடித்தனமாக தனித் தமிழ்நாடை எதிர்க்காமல், ம.பொ.சி. ஏற்பாடு செய்த ஒரு முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து, தனது ஆதரவு நிலைப்பாட்டை பின்னாளில் காட்டிக் கொண்டார்.

ம.பொ.சி., உள்ளிட்டோர் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப் பட வேண்டி போராடியதன் காரணமாக, வேறு வழியின்றி மொழிவழி தமிழ்நாடு 1956ல் உருவாகி, பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. அந்தக் கால கட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்திருந்தார். அதன் பின்னரே தமிழ்நாடு என்று மெட்ராஸ் மாகாணம் பெயர் மாற்றம் பெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு அண்ணாதுரையின் பங்களிப்பை தமிழக அரசு கூறுவதில் பெரும் தவறு காண முடியாது என்றாலும், ஈவேரா., தொடங்கி அண்ணாதுரை என்று வரிசைப் படுத்துவது, உண்மையான போராளிகளை கொச்சைப் படுத்துவதுதான்!

உண்மையில், மொழி வாரி மாகாணங்கள் பிரிக்கப் பட்ட போதே, தமிழ்நாடு பிரிவினைக்கு எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர் ஈ.வேரா.! அவர் கூறிய கருத்துகள் பதிலுரைகளில் இருந்தே, அவரது எண்ணத்தை அறிந்து கொள்ளலாம்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போதான ஈ.வே.ரா., கருத்துகளில் சில இவை…
“மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்.”
(விடுதலை 21.1.47)
“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் #உணரவேண்டும்.”
(ஈ.வே.ரா.,விடுதலை 11.01.1947)
“சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டுவிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்”
(ஈ.வே.ரா, விடுதலை 01.08.1948)
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன. இன்றைக்கு 30 வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர, “குமரி முதல் வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”
(பெரியார் ஈ.வே.ரா. #சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724)
தினத்தந்தி (11.10.55)
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வே.ரா. : இது பற்றி #எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வே.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர். (மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று #பணிக்கர்_சொன்னார். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.”
அதே பேட்டியில் வேறொரு இடத்தில்..
நிருபர்: கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்துவிடுமே..! இது பற்றி உங்கள் கருத்து என்ன..?
ஈ.வே.ரா: கொள்ளேகாலம் பறிபோனது பற்றி #எனக்கு கவலை இல்லை. அப்பகுதி நமக்கு சம்மந்தமில்லாதது. நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.



