
உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்!
ஐ.என்.எக்ஸ்., மீடியா நிதி முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., கைது செய்தது. தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையும் கைது செய்ததாக அறிவித்தது. இதனால் அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் அதிகரித்ததாகவும், எனவே அவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரப் பட்டது. இதை அடுத்து தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு, சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே முதல் கட்ட சிகிச்சை அளிக்கப் பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக, எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை அனுமதிக்கப்பட்டார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் திரும்பி அனுப்பப் பட்டார்.
இந்நிலையில், ‘ப.சிதம்பரம் உடல் நிலை குறித்து கவலைப்படும்படியாக எதுவும் இல்லை’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



