hyderabad sadar2 - 2026

யாதவ குலத்தவரின் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக ‘சதர் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டாம் நாள் யாதவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கும் பண்டிகை சதர் பண்டிகை. சதர் என்றால் ஹைதராபாத் பேச்சு நடைமுறை வழக்கில் ’முக்கியமானது’ என்று பொருள்.

வருடா வருடம் தெலங்காணாவில் முக்கியமாக ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த எருமை மாட்டு திருவிழா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1940ஆம் ஆண்டு முதல் இந்தத் திருவிழா ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது

விமர்சையான சதர் பண்டிகையில் பெரிய பெரிய எருமை மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான். பளபளவென்று மின்னும் வண்ணம் கருத்த எமன் வாகனத்தை அலங்கரிப்பார்கள்.

ஒரு வாரம் முன்பிருந்தே ஏற்பாடுகள் தொடங்கி விடும். எருமையின் உடல் மீதிருந்து ரோமங்களை அகற்றி தயிரும் வெண்ணெயும் தேய்த்து கருப்புக் கண்ணாடி போல் வழுவழுப்பாக்குவார்கள். கொம்புகளுக்கு பல நிற ரிப்பன்கள் சுற்றி வண்ணமயமாக்குவார்கள். பூமாலைகளும் மணி மாலைகளும் அணிவித்து உற்சாகமூட்டுவார்கள்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

மாட்டின் கால்களுக்கு சலங்கை கட்டி அவற்றை ஆட விடுவார்கள். பின் அவற்றை மனிதக் காளைகள் அடக்குவதுதான் இந்த விழாவின் சிறப்பு.

தினமும் எருமைகளுக்கு காலையில் 15 லிட்டர் பாலும் முந்திரிப் பருப்பும் ஆகாரமாக அளிப்பார்கள். இரவில் விஸ்கியோடு பிஸ்தா பருப்பு உணவு.

இளைஞர்கள் மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கும் போது அவை முன்னங்கால்களைத் தூக்கி தாக்க முற்படும். ஆனால் மிகப் பெரிய உருவமும் மிகமிக அதிக எடையும் கொண்டதாக இருப்பதால் மனிதர்களே வெற்றி பெறுவர்.

hyderabad sadar1 - 2026

ஹைதராபாத் சுற்றுப்புறங்களில் இருக்கும் பல மாவட்டங்களில் இருந்தும் பலர் ‘சதர்’ உற்சவ வேடிக்கை காண திரண்டு வருவர். தற்போது இதன் பிரபலம் பெருகி வருவதால் இந்தியா முழுவதிலிருந்தும் இதைக் காண மக்கள் பெரும் அளவில் வருகை தருகின்றனர்.

இந்த எருமை மாடுகளின் விலை பல கோடி கணக்கில் உள்ளது. ஹைதராபாத் நாராயண்குடாவில் நிகழும் பண்டிகை அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த விழாவிற்காக பாரதத்தின் பல ஊர்களிலிருந்தும் எருமை மாடுகள் ஹைதராபாத் வந்து சேர்கின்றன.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

இந்த ஆண்டு எருமை நட்சத்திரங்களாக ஹரியானாவில் இருந்து 1600 கிலோ எடை கொண்ட ‘சர்டஜ்’ எருமையும், 2000 கிலோ எடை கொண்ட ‘ஷஹென்ஷா’ என்ற எருமையும் வந்திறங்கியுள்ளன.

எருமை மாடுகள் அணிவகுப்போடு யாதவ குலத்தவர்களின் ஊர்வலம் தாரை தப்பட்டை முழங்க ஆட்டமும் பாட்டமுமாக ஹைதராபாதிலுள்ள முஷீராபாதில் தொடங்கி நாராயண்குடா ஒய்எம்சிஏ மைதானத்தில் நிறைவடைந்தன.

இதன் பொருட்டு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வாகனங்களுக்கு மாற்று வழிகளை ஐதராபாத் நகர டிராபிக் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

அக்டோபர் 29 செவ்வாய் நேற்று மாலை 7 மணி முதல் புதன் கிழமை இன்று காலை 5 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் இதற்காகக் கடைபிடிக்கப் பட்டது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending