
ஆந்திர மாநிலத்தில் இப்போது அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது ஜகன் மோகன் வீட்டுக்கு ஜன்னல் வைக்கும் விவகாரம்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மாநில முதல்வர் ஜகன் மோகனின் சொந்த வீட்டில், ஜன்னல், கதவுகள் பொருத்த அரசு கஜானாவில் இருந்து ரூ.73 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜகன் மோகன் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடிகள் நடந்து வருகிறது. குண்டூர் மாவட்டத்தின் தடேபள்ளி கிராமத்தில் உள்ள ஜகன் மோகனின் சொந்த வீட்டுக்கு அரசின் பணத்தில் ரூ.5 கோடி செலவு செய்து சாலை அமைக்கப்பட்டது. மின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.3.6 கோடி ஒதுக்கப்பட்டது. ஜகன் வீட்டில் ஹெலிபேட் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.1.89 கோடியும், வீட்டுக்காக கூடுதல் நிலம் கையகப்படுத்த ரூ.3.25 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல்வர் வீட்டின் அருகே மக்களை சந்திக்க அலுவலகம் கட்டுவதற்கு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி தடாலடியாக மக்கள் பணத்தை கஜானாவில் இருந்து எடுத்து சொந்த பயன்பாட்டுக்கு ஜகன் விரயமாக்கி வரும் நிலையில், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கதவு மற்றும் ஜன்னல் பொருத்த ரூ.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.
இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தைப் பதிவு செய்த போது, ஜெகன் அரசு, அவரது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு சுமார் 73 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. அரசாங்க பணத்தில் இது செய்யப் படுகிறது. கடந்த 5 மாத ஆட்சியில் நிகழ்ந்துள்ள நிர்வாக சீர்கேடுகளால் ஆந்திர அரசு நிதிச் சிக்கலில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு செலவு தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரம், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட அறையை, அது சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறி, முதல்வராகப் பதவியேறதும் ஜகன் மோகன் ரெட்டி, அதனை இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றபோதும், ஹைதராபாத்தில் இருந்து கட்சிக் காரர்கள், உள்ளூர் விவசாயிகள் என பலரை ரயிலில் அழைத்துச் சென்றார்! இதற்கு அரசு சார்பில் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டது.
ஐதராபாத் மற்றும் விஜயவாடா நகரில் முகாம் அலுவலகம் நடத்த ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தைப் போலவே, தெலங்கானாவிலும் முதல்வர் அலுவலகம் மற்றும் வீடு கட்ட அரசு நிதி ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.



