புது தில்லி: எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் எல்.கே. அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டது. அத்வானி, அமிதாப் பச்சன், பிரகாஷ் சிங் பாதல், பேராசிரியர் மல்லூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் உள்பட 9 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷண் விருது வழங்கினார். முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, சுதா ரகுநாதன், பில்கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மபூஷண் விருதையும், அசோக் பாகவத், சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராமன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார். சுதந்திர போராட்ட வீரரும் காசி பல்கலைக் கழக நிறுவுனருமான பண்டிட் மதன்மோகன் மாளவியா சார்பில் அவரது குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Popular Categories