
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அயோத்தி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், அயோத்தியில் இருக்கும் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இன்று அளிக்கும் தீர்ப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இருக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமையியல் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வெளியாகும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
தீர்ப்பு வெளியான பின் மக்கள் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதியாக இருப்பது முக்கியம்.

சட்ட ரீதியாக அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபட வேண்டும். தவறான செயல்களில் ஈடுபட கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு அமைப்புகள் இதுபோல பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.