
“பவன் கல்யாணுக்கு மூன்று மனைவிகள் ஐந்து குழந்தைகள். அவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்?” என்று ஆந்திர முதல்வர் ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி போதிக்கப் பட வுள்ளது என்று முதல்வர் ஜெகன் அறிவித்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல்வர் எடுத்த இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வெளிவருகின்றன.
திங்கள் கிழமை நேற்று மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏபிஜே அப்துல் கலாம் வித்யா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த கொண்டாட்டங்களில் ஜெகன்மோகன் ரெட்டி பங்குகொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரதீபா புரஸ்கார விருதுகள் வழங்கினார் .
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜகன், அரசுப் பள்ளிகளில் ஆங்கில போதனை குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
“உங்கள் குழந்தைகள் எங்கே படிக்கிறார்கள்? ஏழைகளும் முன்னேற வேண்டும். ஆங்கில மீடியம் படிப்பு மிகத் தேவை. ஆங்கிலம் அறியாவிட்டால் நம் பிள்ளைகள் போட்டிகள் நிறைந்த உலகத்தில் பிரகாசிக்க இயலாது.
அரசு பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அரசு உத்தரவு ஒன்று அனுப்பினோம். சந்திரபாபு, வெங்கய்ய நாயுடு, பவன் கல்யாண் போன்றவர்களின் வாய் திறந்து கொண்டது. நம் பிள்ளைகளுக்கு நல்லது செய்யும்போது விமர்சிப்பது ஏன்?
இது போன்று பேசுபவர்கள் ஒரு முறை யோசித்து பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் பேரன் பேத்திகள் எந்த மீடியத்தில் படிக்கிறார்கள்? ஆங்கிலத்தை எதிர்ப்பவர்களின் குடும்பத்தில் பிள்ளைகளை எந்த மீடியத்திற்கு அனுப்புகிறார்கள்? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேரன்களை எந்தப் பள்ளியில் சேர்த்துள்ளீர்கள்? சொல்லட்டுமா?
நடிகர் பவன் கல்யாண்…! மூன்று மனைவிகள்…! நான்கோ ஐந்தோ குழந்தைகள்…! அவர்களை எந்தப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்?” என்று இந்த நேரத்தில், தன் மீது விமர்சிப்பவர்கள் குறித்து நேரடியாக கேள்வி கேட்டார் ஜெகன்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்திலேயே கல்வி!
“நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் செல்வம் நல்ல கல்வி. அந்த திசையில் அடி எடுத்து வைத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக விளங்கும். அரசுப் பள்ளிகளின் அடையாளத்தை மாற்ற வேண்டுமென்று தான் “அன்றும் – இன்றும்” நிகழ்ச்சி என்று பெயர் வைத்தோம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கில லேப்கள் அமைத்துள்ளோம். வரும் ஆண்டில் இருந்து ஆங்கில மீடியம் கட்டாயம். தெலுங்கோ ஹிந்தியோ இரண்டாம் மொழியாக படிக்க வேண்டும்.
ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 7, 8, 9, 10. நான்காண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் அமல் செய்வோம். விரைவில் முழு அளவில் கல்விக் கட்டணத்தை திருப்பித் தருவோம்.
மதர்சா போர்டு ஏற்பாடு செய்வோம். மதர்சாவில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட “அம்மா மடி” திட்டம், ஒய்எஸ்ஆர் திருமண காணிக்கை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஒரு லட்ச ரூபாய் அளிப்போம். சந்திரபாபு கொடுத்த பணத்தை விட இரண்டு மடங்கு அதிகம் அளிப்போம்” என்று ஒய் எஸ் ஜகன் இந்த நேரத்தில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா அமைச்சர்களுடன் எம்எல்ஏக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கு கொண்டனர்.