
சபரிமலை மற்றும் ரபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதும் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘காவலாளி திருடன்’ என மோடியை விமர்சித்த ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 – 50 வயது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ‘அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அடுத்து, இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது இதனை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அண்மை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சௌக்கிதார் சோர் ஹை என, காவல்காரரே திருடன்’ என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் கூறியது குறித்து, அவர் மீது பாஜக எம்.பி., மீனாட்சி லோகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீது காலை 10.30 க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனை கேரளம் மட்டுமின்றி, தென்மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.