புது தில்லி:
ரயில் மாறி ஏறியதால், 15 வயது சிறுமி கடத்தி சீரழிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் ஏறச் சென்றார். ஆனால், அவர் தவறுதலாக தில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தில்லி சென்று அவர் இறங்கியதும், உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும், அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அந்த நபர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று, தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள், அந்தச் சிறுமியை, ரூ.70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.
சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், அவரைத் திருமணம் செய்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து தப்பிய, அந்தச் சிறுமி, ரயில் நிலையத்திற்கு வந்தார். மீண்டும் அங்கு அவரைப் பார்த்த ஹசீனா, மயக்கும் வகையில் பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்தார். அதில் அந்தச் சிறுமி மயக்கமடைந்தார். பின்னர் அந்தச் சிறுமியை, 22 வயது இளைஞர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஹசீனா ஒப்படைத்தார். அந்த இளைஞரும் சிறுமியை ரயில் நிலையம் அருகேயே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிச் சென்றார்.
மயக்கம் தெளிந்த சிறுமி, அங்கிருந்த பொது மக்கள் உதவியுடன் தப்பித்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள், சராய்சலேகான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.



