சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு விவகாரம்: அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ்

புது தில்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்பு விவகாரத்தில், பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு ஹாஜி மெஹ்மூத் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை இன்று காலை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக தலைவர்களான் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. சிபிஐ மற்றும் பாஜக., விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் என 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. முன்னதாக, கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடம் இடிப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப் படாததால் ரேபரேலி நீதிமன்றம் இந்த வழக்கைக் கைவிட்டது. இதையே அலகாபாத் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடக்கிறது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.