
பாஜக., செயல் தலைவராக இருந்து வந்த ஜே.பி. நட்டா, இன்று காலை பாஜக.,வின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து இன்று அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, பாஜக.,வில் உட்கட்சித் தேர்தல்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த உட்கட்சித் தேர்தல்கள் தற்போது இறுதி வடிவத்தை அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தேசிய அளவில் தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை கட்சியின் மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு மேற்பார்வையிட்டு வருகிறது.

திங்கள் கிழமை இன்று தில்லி பாஜக., தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு எவரும் மனு தாக்கல் செய்ய வில்லை என்பதால், ஜே.பி.நட்டா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜே.பி. நட்டாவின் பெயரை, பாஜக., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், ஒரு மனதாக தேசிய தலைவராக தேர்வு செய்யப் பட்டார் ஜே.பி.நட்டா! பின்னர் தற்போதைய தலைவர் அமித் ஷா அவரை தலைவர் பொறுப்பில் அமர வைத்தார். இதை அடுத்து இன்றே பாஜக., தேசியத் தலைவராக ஜேபி நட்டா பொறுப்பேற்று கட்சிப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

இதை அடுத்து நட்டாவுக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் நட்டாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.



