
இந்தியாவில் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாடகைக்கு பைக்கை எடுத்து ஓட்டும் நடைமுறையில் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் அவற்றின் உரிமையாளர்கள்.
சொந்த வாகனங்களையே சுட்டுக்கொண்டும் சுருட்டிக் கொண்டு சென்றுவிடும் இந்தக் காலத்தில், வாடகைக்கு இப்படி வண்டிகளை வாங்கி விட்டால்… மொத்தமாக சுருட்டிக் கொண்டுவிடாமல், பகுதி பகுதியாக லவட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள் நம் நாட்டின் அதி நாணயஸ்தர்கள்.
வாகனங்களை பார்க்கிங் செய்திருக்கும் இடத்தில், அவற்றின் டயர்களை திருடிச் சென்றுவிடுவது. பேட்டரிகள், முகப்பு விளக்குகள் ஆகியவற்றை சுட்டுக் கொண்டு விடுவது என்று வாகனங்களை பெரிதாக எதுவும் மிச்சப்படாதபடிக்கு திருட்டு கைவரிசை காட்டி விடுகிறார்கள்.
இதனால் பொதுமக்களின் வசதிக்காக இவ்வாறு நிறுவனம் அமைத்து பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்து மோட்டார் வாகனங்களை வாடகைக்கு விட்டால், உரிமையாளர்களுக்கு எதுவும் தேறுவதில்லை. இதனால் பலர் நஷ்டப்பட்டு, தங்கள் எண்ணத்தையே இப்போது நொந்துகொள்கிறார்கள்.
முன்பெல்லாம் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது தெரியாதவர்களுக்கு சைக்கிள் தரமாட்டார்கள். அல்லது உறுதி வாங்கிக் கொண்டு சைக்கிள் கொடுத்து வந்தார்கள். ஆனால் நேர்மையற்ற, திருட்டுப் புத்தி கொண்டவர்கள் பலர் இன்னமும் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், இவை போன்ற சேவைகள் பெரிதாக மக்களுக்கு கைகொடுப்பதில்லை.
தேஜஸ் ரயில் இருந்தே பாட்டு கேட்பதற்கான ஹெட்செட், போர்வைகள் உள்ளிட்டவற்றை லவட்டிக் கொண்டு போகிறார்களே! இதில் பைக்கை வாடகைக்கு விடுவது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்!
பொதுச்சொத்துகளாக பூங்காக்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றில் கூட அழகிய அலங்காரப் பொருள்களை திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப் படுகிறார்கள் பலர்.