
விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடத்தில் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஜைகளில் கலந்து கொண்டார். அடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று விசாகா சாரதா பீடத்தை தரிசித்தார்.
ஸ்ரீசாரதா பீடத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களாக பல ஆன்மிக நிகழ்ச்சிகளை மடத்தில் நடைபெற்றன. திங்கள் கிழமை அன்று நடந்த ராஜஷ்யாமளா யாகத்தின் பூரணாஹுதி நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜகன், தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, பிஜேபி தலைவர் சுப்பிரமணியம், தெலங்காணா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாசயாதவ் உட்பல பலர் பங்கேற்றனர்.
இந்த பீடத்துக்கு வந்திருந்து ஸ்ரீ சொரூபானந்த சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்ற மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அவருக்கு மரியாதை செய்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு பல்வேறு பிரச்னைகளில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. பீடத்தின் அருகில் சிலர் சாலையோரம் நின்று ஜெகன் கான்வாய் செல்லும்போது பிளே கார்டுகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாகா சாரதா பீடத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் பங்குகொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார். விஸ்வ சாந்தி மகா யாகத்தில் பங்கு கொண்டார். முதலமைச்சர் என்ற பதவியுடன் தனது வெற்றிக்காக யாகங்கல் செய்த ஸ்ரீசாரதா பீடத்துக்கு இரண்டாவது முறையாக வந்து, வேத பண்டிதர்களின் பூரண கும்ப வரவேற்பு மரியாதைப் பெற்றார் ஜெகன்.

சாரதா பீடம் ஆண்டு விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. ராஜசியாமளா தேவி சிறப்பு பூஜையில் முதலமைச்சர் ஜெகன் பங்கேற்றார். ஸ்வரூபானந்த ஸ்வாமிகளோடு சேர்ந்து ஜகன் கோ பூஜையும் செய்தார். வன்னி மரத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைத்து வழிபட்டார்.

முன்னதாக ஆந்திர முதல்வராக வெற்றி பெற்றிருந்த பின்னர் முதல்முறையாக இந்த பீடத்துக்கு வந்த போது, சொரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் ஜெகனுக்கு முத்தமிட்டு வரவேற்று ஆசி கூறியிருந்தார். அது அப்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.



