வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.
வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ளார் என்று கணவனோடு அடிக்கடி சண்டையிட்டு வந்த மனைவி ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த கணவன்மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி விட்டு ஓடிப்போனார்.
தன்னை கண்டுகொள்ளாமல் வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ள கணவனை மனைவி இப்படி பழி வாங்கினாள்.
கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிவிட்டு இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடிப்போனார். இந்த சம்பவம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூருவில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மஞ்சுநாதுக்கு (40) ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பத்மா (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். தற்போது அவர்கள் யெஸ்வந்த்பூரில் உள்ள மோகன்குமார் நகரில் வசித்து வருகிறார்கள்.
ஆனால் மஞ்சுநாதிற்கு வேறொரு பெண்ணோடு தகாத உறவு உள்ளது என்று சந்தேகித்த மனைவி அடிக்கடி கணவரை அது பற்றி வினவி வந்துள்ளார் .இது விஷயம் குறித்து தம்பதிகளிடையே சில நாட்களாக தகராறு நடந்து வந்தது. சனிக்கிழமை கூட அவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. ஞாயிறன்று காலை ஏழு மணி அளவில் சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி புகை வந்து நன்றாக பொங்கும் வரை காய்ச்சி பெட்ரூமில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது ஊற்றிவிட்டு கடுமையான காயங்களோடு அவர் துடிக்கையில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஓடிப்போனார்.
மஞ்சுநாத் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். முகம், தோள், நெஞ்சு பகுதிகளில் சுமார் 50 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மஞ்சுநாத் உயிருக்கு அபாயம் இல்லை என்றும் ஆனால் குணமாவதற்கு நிறைய காலம் பிடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து புகார் பெற்று போலீசார் பத்மாவிற்காக தேடி அவரை கைது செய்தார்கள்.
முக்கால் லிட்டர் எண்ணையை காய்ச்சி ஊற்றியதாகவும் அது கோல்ட் வின்னர் எண்ணெய் என்றும் போலீசாரிடம் அவர் விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.