ஜிபி கணக்கில் இணைய சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டதன் காரணமாக, இந்திய ரயில்நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ரயில்வே துறையுடன் கைகோர்த்த கூகுள், நாட்டிலுள்ள ரயில்நிலையங்கள் இலவச வைஃபை சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
முதன்முதலாக மும்பை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இலவச வைஃபை சேவை துவங்கப்பட்டது.அதை தொடர்ந்து இந்தியாவிலுள்ள 400 ரயில்நிலையங்கள் வரை இத்திடம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, ரயில்நிலையங்களில் வைஃபை இயந்திரத்தை நிறுவுவது, அதை பராமரிப்பது, டேட்டாக்களை மதிப்பீடு செய்வது உள்ளிட்ட பணிகளை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
இதன்மூலம் ரயில் பயணம் மேற்கொள்ளும் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வந்தனர். அதன்படி ரயில்நிலையங்களுக்கு வரும் பயணிகள் இலவச வைஃபை சேவை 30 நிமிடங்கள் வரை பெற முடியும்.
மடிக்கணினி மற்றும் கைபேசி மூலம் மின்னஞ்சல் பார்ப்பது, ரயில் போக்குவரத்து குறித்த உடனடித் தகவல்களை பெறுவது உள்ளிட்ட சேவை கிடைக்கப்பெற்றது. ரயில்நிலையங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, உலகளிலேயே அதிகமானோர் இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த விலை இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இலவச வைஃபை சேவை மூலம் தினசரி ஜிபி கணக்கில் இணைய சேவை இந்தியர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. அதனால் இந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது என கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சீசர் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
கூகுளின் இந்த முடிவு ரயில் பயணிகளிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நாட்டிலுள்ள ரயில்நிலையங்களில் டாடா டிரெஸ்ட் குரூப், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வரும் இலவச வைஃபை வசதி பயணிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.