கொரோனா வைரஸுக்கு 2005 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 75ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸுக்கு உலகின் மற்ற இடங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஹாங்காங்கில் 2 பேரும், ஜப்பான், தைவான், பிரான்ஸ், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொரோனோவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் 1030 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,005 ஆக உயர்ந்தது; வைரஸ் தாக்கம் உள்ளோர் எண்ணிக்கை, 74,185 ஆக உயர்ந்தது.
சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பின்னர் நாட்டின் 31 மாகாணங்களில் பரவியது. மேலும், ஜப்பான், ஹாங்காங் என 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியது.
இந்த வைரஸ் பாதிப்பு வெளியுலகுக்குத் தெரிய வந்து நேற்றுடன் 50 நாட்கள் கடந்த நிலையில், சீனாவில் இதுவரை 2,005 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 136 பேர் உயிரிழந்தனர். சீனாவில் 74,185 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை வூஹானில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்து வந்த அந்த மருத்துவமனை இயக்குநர் லியூ ஜிமிங்க், வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இது கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 நாட்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்த ஜப்பான் கப்பலில் இருந்து பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். இதை அடுத்து அவர்கள் கப்பலில் இருந்து வெளியேறி வருகின்றனர்.