இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் புதிதாக 2 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 36 நோயாளிகளுடன் இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
நேற்று மாலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்படி, இந்தியா முழுக்க 114 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. ஆனால், இன்று காலை வெளியாகி உள்ள நிலவரப்படி, இன்னும் 11 பேருக்கு கூடுதலாக வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு 125 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால்தான், நாடு முழுக்க உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. நீச்சல் குளங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் நேற்று மாலை அந்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 22, கர்நாடகாவில் 8, டெல்லி 7, தெலுங்கானா மற்றும் லடாக் 4, உத்தரப்பிரதேசம் 12, ஜம்மு-காஷ்மீர் 3, ராஜஸ்தான் 2 வைரஸ் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
125 பேரில் 103 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.