உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: 4 பேர் கைது

கோவா: கோவாவில் புகழ் பெற்ற ஃபேப் இண்டியா ரெடிமேட் ஷோரூமில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா பொருத்தப் பட்டிருப்பதாக, இன்று அங்கே சென்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்து புகார் செய்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஷோரும் உரிமையாளர், திருட்டைத் தடுக்க அறைக்கு வெளியே சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இருப்பினும் போலீஸாரின் தீவிர விசாரணையையை அடுத்து, இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா முதல்வர் பர்சேகர், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி இராணியிடம் உறுதியளித்துள்ளதாகக் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். பர்சேகர் தற்போது, பெங்களூரு தேசிய செயற்குழுவில் கலந்து கொண்டிருக்கிறார்.