
சென்னை:
இந்திய விண்வெளி ஆய்வு மையம் – இஸ்ரோ, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜிஎஸ்எல்வி., மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டின் முதல் பயணம் திங்கட் கிழமை இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. மாலை 5:28க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. ஜூன் 5 திங்கள்கிழமை இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ள ஜிசாட்-19க்கான கவுன்ட்டவுன் நேன்று துவங்கியது.
நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று திங்கட்கிழமை மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும் என்றார்.



