
மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட இதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தமிழகம் முழுக்க நேற்று டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் முண்டி அடித்துக்கொண்டு சமூக இடைவெளி விடாமல் நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது நாடு முழுக்க மதுக்கடை காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். நேரடியாக விற்பனை செய்வதை தவிர்க்க முயற்சிக்கலாம்.
வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும். ஆனால் மது விற்பனை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை .நாங்கள் இது தொடர்பாக அறிவுறுத்தல் மட்டுமே அளித்துள்ளோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.