
கடந்த 45 நாள்களாக அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கொலைகார நாடாக மாறியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
கொரோனா பாதிப்பினால் 45 நாள்களுக்கு பிறகு மே 7-ம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், கொலை-கொள்ளை-பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடங்கிவிட்டன.
மே 7-ம் தேதி காலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காத்திருந்த குடிகாரன்கள், ரவுடிகள், தொழிலாளிகள் வரிசையில் மணிக்கணக்கில் நின்று, முண்டியடித்து மதுக்கடைகள் முன் போலீஸாரிடம் தடியடி வாங்கிக் கொண்டு, மது பாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
சமூக ஆர்வலர்கள், தேசபக்தர்கள், அரசியல் கட்சிகள் எவ்வளவோ வலியுறுத்தியபோதும், வருமானத்தைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு மதுக்கடைகள் திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் இத்தனை நாள் அமைதியாக இருந்த குடிமகன்கள், தங்களின் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகளைத் தொடங்கி வி்ட்டனர். கிராமப்புறங்களில் மது்க்கூடங்கள் (பார்கள்) இல்லையென்றாலும் வயல்வெளிகள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிழற்கூடங்களி்ல் அமர்ந்து இரவோடு இரவாக குடித்துத் தீர்த்தனர்.

சமூகவிரோதிகள், சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள், முன்விரோதத் தகராறுக்காக காத்திருந்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கிவி்ட்டனர். இதற்கு உதாரணமாக தஞ்சையில் வியாழக்கிழமை நள்ளிரவு குடிபோதையில் ரெளடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரெளடி அதே இடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் கீழவாசல் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரெளடி அருண்குமார் (வயது 35), இவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களிடையே தகராறு ஏற்பட்டு இந்த மூவரினால் அருண்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில், தன்னுடன் பிறந்த சகோதரியை அண்ணன் ஒருவன் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிவிட்டான்.
திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியின் மகள் அம்சவள்ளி (20), ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது அண்ணன் கணேஷ் பாபு (23 ) லாரி டிரைவர். அம்சவள்ளியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டியும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருமணத்திற்கு கணேஷ் பாபு ஆரம்பக் கட்டத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினால் கடந்த 40 நாள்களாக மதுக்கடை மூடியிருந்ததால் அமைதியாக இருந்த கணேஷ் பாபு நேற்று மது அருந்திவிட்டு குடிபோதையில் தங்கை அம்சவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் பாபு அருகிலிருந்த கட்டையால் தங்கை அம்சவள்ளியைக் கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அம்சவள்ளி அதேஇடத்தில் உயிரிழந்தார்.
தங்கையை கொலை செய்து விட்டு கணேஷ் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்சுழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் இன்னும் எத்தனை, எத்தனை சம்பவங்கள் அரங்கேறவுள்ளதோ என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுவதுடன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் சீர் கெடத் தொடங்கிவிட்டதை இது உணர்த்துகிறது.
- சதானந்தன், சென்னை