ஆரோக்கிய சேது செயலி மூலம் ஏற்கனவே 650 ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் புதிதாக 300 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் கடந்த ஏப்.,2ம் தேதி ‘ஆரோக்கிய சேது’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிவேகமாக 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலியான இது, தற்போது அந்த எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், கொரோனா ஹாட்ஸ்பாட்கள் குறித்த விவரம், பொது இடங்களில் நோய் தொற்றுள்ள நபர்களை எதிர்கொண்டால் எச்சரிப்பது, தனி நபருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக என தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செயலி அளிக்கும்.
இந்த செயலி குறித்து நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வரும் 650 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவி வரும் புதிய பகுதிகளை ஆரோக்கிய சேது செயலி மூலம் எளிதாகக் கண்டறிய முடிகிறது.
அந்த வகையில் இந்த செயலி மூலம் புதிதாக 300 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆரோக்கிய சேதுவை பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். செயலியில் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 65 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
இதில் 16,000 பேருக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 12,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த செயலியில் கூடுதலாக 10 மொழிகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.