கொரோனா பாதிப்புக்கு தங்க நகை வியாபாரமும் தப்பவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஆதாரத்துடன் சுட்டிக் காட்ட வேண்டுமானால் பிசினஸ் டுடே சஞ்சிகையில் அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில், கொரோனா காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 47 நாட்களில் சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு நகைத்துறை வியாபார இழப்பினைச் சந்தித்துள்ளதாகக் கூறுகிறது.
எனினும் தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இம் மாத இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் மீண்டும் நகைக் கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 37 வகையான கடைகளைத் திறந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்த பட்டியலில் நகைக் கடைகள் இடம் பெறவில்லை. காரணம், பெரும்பாலான நகைக்கடைகள், குளிர்சாதன வசதி (மல்டிபிள் ஏசி) செய்யப்பட்டவை என்பதால் மக்கள் கூடும்போது எளிதாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில் மூன்று மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும், முதல் கட்டமாக 10 ஷோரூம்களை மட்டும் திறக்க இருப்பதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் மட்டும் தெரிவித்துள்ளது. இவை குறைந்த கட்டுப்பாடுகளை கொண்ட பசுமை மண்டலங்களில் செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக தொலைக்காட்சிகளில் இந் நிறுவனம் விளம்பரமும் செய்து வருகிறது.
இதேபோல், டாடா குழுமத்தின் டைட்டானின் இந்தியாவின் முன்னணி நகை பிராண்டான தனிஷ்க், நாடு முழுவதும் தனது 320 கடைகளை ஒரு கட்டமாக மீண்டும் திறக்க திட்டமிட்டு வருகிறது.
நகை வியாபார பாதிப்புகள் குறித்து அகில இந்தியா ஜெம் அன்ட் ஜூவல்லரியின் தலைவர் அனந்த பத்மநாபன் கூறுகையி்ல், நாட்டில் 3 லட்சம் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் பொதுவாக மாதத்திற்கு 60 முதல் 70 டன் வரை தங்க வணிகம் செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கடந்த 47 நாட்களில் 50,000 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளதாக தெரிவி்க்கிறார்.
நகை அதிகம் விற்கும் பருவமான அக்ஷய திருதியில் மட்டும் இந்த ஆண்டு அதிக வருமான இழப்பு ஏற்பட்டது. மேலு்ம கடந்த இரு மாதங்களாக திருமண வைபவங்கள் நடக்காததால் அதிக இழப்புகளைச் சந்தித்து விட்டோம். மக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கினாலும், வரும் ஜூலை மாதத்துக்குப் பிறகு தான் வணிகம் இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும் என்றும் அனந்த பத்மநாபன் தெரிவிக்கிறார்.
நகை வியாபாரம் என்பதைப் பொறுத்தவரை ஏதோ ஆடம்பரப் பொருள் என்று கருத முடியாது. நகை இல்லாமல் பணச் சுழற்சி ஏற்படாது. அதேநேரத்தில் ஏராளமான பொதுமக்கள் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், அடுத்த வருமானத்திற்கு சேமிப்புத் தங்கத்தை விற்பதும், புதிய நகைகளை செய்ய ஆர்டர் கொடுப்பதும் வரும் காலங்களில் அதிகம் நடக்கக் கூடியதாக இருக்கும். எனினும், பெரும்பாலான நகை வடிவமைப்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், அவர்கள் திரும்பி வர இன்னமும் குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொழிலில் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நகை வடிவமைப்பாளர்கள், தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆக, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இந்தத் துறையை நம்பி பெருநகரங்களில், குறிப்பாக சென்னை போன்ற தலைமைகங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நகைத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர்.
எது, எப்படி இருப்பினும் அத்தியாவசியத் தேவைக்கே கஷ்டப்படும் மக்கள், தற்போதைக்கு நகை வாங்க செலவிடமாட்டார்கள் என்றாலும், இதை நம்பி இருக்கும் பரம்பரைத் தொழிலாளர்கள், வருமானத்திற்காகவது கடைகளைத் திறக்க வணிக முதலாளிகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
சிறப்புக் கட்டுரை – சதானந்தன், சென்னை.