
நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், எம்.பி.க்களுக்காகவும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள் குறைந்த அளவு திறந்திருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் வழக்கம் போல் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கும் இன்று மாலை முதல் இயக்கப்படுவதையொட்டி இந்த அறிவிப்பை நேற்று இரவு ரயில்வே வெளியிட்டது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், ”சிறப்பு ரயில்கள் புறப்படும் இடங்கள், இடைநிறுத்தங்கள், சென்றடையும் நகரங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டும் மிகக்குறைந்த அளவு டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள் திறக்கப்படும்.
இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், ரயில்வே ஊழியர்களுக்கான வேலைக்கான பாஸ், சிறப்பு டிக்கெட்டுக்கான பாஸ்கள் பெறலாம்.
அதேசமயம், இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது. அவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் பெற முடியும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணத்தில் சலுகை தரப்படும். மூத்த குடிமக்கள் கூட இந்த சிறப்புரயிலில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை தரப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொழில்நுட்பக் காரணங்களால் சற்று தாமதமாகத் தொடங்கியது. முதல் ஒன்றரை மணிநேரத்தில் அனைத்து வழிகளிலும் 18 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
புதுதில்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.
அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும், ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்கு படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு ரயில் புறப்படும் முன் 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும், அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், பயணிகள் சொந்தமாக படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.