spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா4 வது லாக்டவுன் நீட்டிப்பு? என்ன சொன்னார் பிரதமர் மோடி... முழு உரை!

4 வது லாக்டவுன் நீட்டிப்பு? என்ன சொன்னார் பிரதமர் மோடி… முழு உரை!

- Advertisement -

நாட்டுமக்கள் அனைவருக்கும், என் மரியாதைகலந்த வணக்கங்கள், கொரோனா பெருந்தொற்றோடு, போராடிவரும் இந்த வேளையில், உலகம் இப்போது, 4 மாதங்களுக்கும் அதிக காலத்தைக் கடந்திருக்கிறது. இந்த வேளையில், அனைத்து நாடுகளின், 42 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டே முக்கால் இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின், துக்ககரமான மரணம் சம்பவத்திருக்கிறது. பாரதத்திலும் கூட, பல குடும்பங்கள், தங்களுடைய சொந்தங்களை இழந்திருக்கிறார்கள். நான் அனைவரிடத்திலும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, ஒரே ஒரு நோய்க்கிருமி, ஒரே ஒரு நோய்க்கிருமி, உலகத்தைச் சின்னாபின்னப்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதிலும், கோடிக்கணக்கான உயிர்கள், சங்கடத்தை எதிர்கொண்டு வருகின்றன. உலகமனைத்தும், உயிரைக் காப்பாற்ற, ஒருவகையில் பார்த்தால் போராடி வருகிறார்கள். நாம் இதுபோன்றதொரு சங்கடத்தை, பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதும் கிடையாது. கண்டிப்பாக இது, மனித சமுதாயத்துக்கு, இவை அனைத்தும், கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தச் சங்கடம், வரலாறு காணாதது. ஆனால், தளர்வதோ, தோற்பதோ, உடைந்து போவதோ, மனிதனுக்கு ஏற்புடைய ஒன்றல்ல. விழிப்போடு இருக்கும் அதே வேளையில், இதுபோன்ற போரில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, இப்போது நாம், தப்பிக்கவும் வேண்டும், மேலும், முன்னேறிச் செல்லவும் வேண்டும். இன்று உலகம் சங்கடத்தில் உழலும் வேளையில், இப்போது நாம், நம்முடைய மனவுறுதியை, மேலும் பலப்படுத்த வேண்டும். நம்முடைய உறுதிப்பாடு, இந்தச் சங்கடத்தையும் தாண்டி, பிரும்மாண்டமாக இருக்கும்.

நண்பர்களே, நாம் கடந்த நூற்றாண்டிலிருந்தேகூட, தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறோம். அதாவது 21ஆம் நூற்றாண்டு, இந்தியாவினுடையது என்ற சொற்களை. நமக்கு கொரோனாவுக்கு முன்பிருந்த உலகத்தையும், உலக அமைப்புக்களையும், விரிவான வகையில் கண்டுணர வாய்ப்பு கிடைத்தது. கொரோனா சங்கடத்துக்குப் பிறகு கூட, உலகத்தில் ஏற்பட்டு வரும் நிலைமை, இதையுமே கூட, நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இப்போது நாம் இந்த இரண்டு காலகட்டங்களையும், பாரதத்தின் கண்கொண்டு பார்க்கும் போது, என்ன தோன்றுகிறது என்றால், இந்த 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்க வேண்டுமென்பது, நம்முடைய கனவு மட்டுமல்ல, இது நம் அனைவருடைய பொறுப்பும் கூட. ஆனால், இதற்கான வழி என்னவாக இருக்கும்? உலகத்தில் இன்று நிலவும் நிலை நமக்கு, என்ன கற்றுக் கொடுக்கிறது என்றால், இதற்கான வழி, ஒன்று மட்டும் தான். தன்னிறைவு பெற்ற பாரதம். நம்மிடத்திலே, சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஏஷ: பந்த:. அதாவது, இது மட்டுமே பாதை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க.

நண்பர்களே, ஒரு நாடு என்ற முறையிலே, இன்று நாம் ஒரு, பெரிய திருப்பத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இத்தனை பெரிய பேரிடர்…. பாரதத்துக்கு, ஒரு அறிகுறியாக வந்திருக்கிறது, ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது, ஒரு, வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறது. நான் ஒரு எடுத்துக்காட்டின் உதவியோடு, என்னுடைய விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா சங்கடம் தொடங்கிய வேளையில், அப்போது இந்தியாவிலே, ஒரே ஒரு, PPE KIT தயாரிக்கப்படவில்லை. N 95 முகக்கவசம் இந்தியாவிலே, பெயருக்குத் தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று, நிலைமை என்னவென்றால், நம் இந்தியாவிலேயே, ஒவ்வொரு நாளும், இரண்டு இலட்சம் PPE, மற்றும் இரண்டு இலட்சம், N 95 முகக்கவசம், தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை நம்மால் எப்படி சாதிக்க முடிந்தது என்றால், ஏனென்றால் இந்தியா, பேரிடரை, சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டது. பேரிடரை ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும், இந்தியாவின் இந்தக் அணுகுமுறை, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற உறுதிப்பாட்டுக்கு, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையவிருக்கிறது.

modi speech
modi speech

நண்பர்களே, இன்று உலகத்திலே, தன்னிறைவு என்ற சொல்லின் பொருள், முழு அளவிலே மாறி விட்டது. உலக அளவிலே தன்னிறைவு என்ற சொல்லுக்கான விளக்கம், மாறிக்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்கு, எதிராக, மனிதனை மையமாகக் கொண்ட உலகமயமாக்கல் பற்றிய விவாதம், இன்று தீவிரமடைந்து வருகிறது. உலகத்தின் முன்பாக, இந்தியாவின் அடிப்படையான சிந்தனை, நம்பிக்கைக் கீற்றாக வெளிப்படுகிறது. இந்தியாவின் கலாச்சாரம், இந்தியாவின் நற்பண்புகள், இவை பேசும் தன்னிறைவு என்ன என்று பார்த்தால், இதனுடைய ஆன்மாவானது, வசுதைவ குடும்பகத்தில் இருக்கிறது. உலகம் ஒரு குடும்பம். பாரதம் எப்போது, தன்னிறைவு பற்றிப் பேசுகிறதோ, அப்போது, தன்னை மையமாகக் கொண்ட அமைப்புக்கு சாதகமாக வாதிடுவதில்லை. இந்தியாவின் தன்னிறைவுக் கோட்பாட்டிலே, உலகத்தின் சுகங்கள், ஒத்துழைப்பு, மேலும், அமைதி குறித்த அக்கறை இருக்கிறது. நமது கலாச்சாரம், உலகம் உய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இது உயிர்கள் அனைத்தின் நலன்களை விரும்புகிறது. இது உலகம் முழுவதையும், ஒரே குடும்பமாகக் கருதுகிறது. இது தன்னுடைய நம்பிக்கை என்னவென்றால், மாதா பூமி:, புத்ரோ அஹம் ப்ருதிவ்யா. இந்தக் கோட்பாட்டை மனதில் தாங்கி இருக்கிறது. நாம், பூமியைத் தாயாக வழிபடுகிறோம், இப்படிப்பட்ட கலாச்சாரம், இதைக் கொண்டிருக்கும் பாரதம், தன்னிறைவு பற்றிப் பேசும் போது, இதன் காரணமாக, ஒரு சந்தோஷமான தன்னிறைவு பெற்ற உலகத்துக்கான சாத்தியக்கூறு, உறுதி செய்யப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில், எப்போதும், உலகின் முன்னேற்றமும் பொதிந்து அடங்கி இருக்கிறது. இந்தியாவின் இலட்சியங்களின் தாக்கம், இந்தியாவின் செயல்பாடுகளின் தாக்கம், உலக நலன்களின் மீது படிந்தே இருக்கிறது. நமது இந்தியா, திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுபடும் போது, உலகத்தின் சித்திரம்கூட மாற்றத்தைக் காண்கிறது. காசநோயாகட்டும், ஊட்டச்சத்துக் குறைபாடாகட்டும், போலியோவாகட்டும், இந்தியாவின் இயக்கங்களின் தாக்கம், உலகத்தின் மீது கண்டிப்பாக ஏற்படுகிறது. சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவு, உலக வெப்பமயமாக்கலுக்கு எதிராக, உலகிற்கு இந்தியா அளித்திருக்கும் பங்களிப்பு. சர்வதேச யோகக்கலை தினம், மனித சமூகத்துக்கு, அழுத்தத்திலிருந்து விடுதலை அளிப்பதில், பாரதத்தின் பரிசளிப்பு. ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உலகில் இன்று, இந்தியாவின் மருந்துகள், ஒரு புதிய நம்பிக்கைத் துளிரைத் துளிர்க்க விட்டிருக்கின்றன. இந்த அடிகள் வாயிலாக, உலகம் முழுவதிலும், இந்தியா பற்றி முழுமையாகப் பாராட்டப்படுகிறது. ஆகையால் இயல்பாகவே, ஒவ்வொரு இந்தியரும் இதுகுறித்துப் பெருமைப் படுகிறார். உலகிற்கு இன்று, நம்பிக்கை ஏற்பட்டு விட்டது, அதாவது பாரதம், மிகவும் சிறப்பாக செயல்படும் என்று. மனித சமூகத்தின் நலன்களுக்காக, மிகவும் நல்ல பங்களிப்பை அளிக்க முடியும் என்று. ஆனால் கேள்வி என்னவென்றால், இது எப்படி சாத்தியம் என்பது தான். இந்த வினாவுக்கான விடை என்னவென்றால், 130 கோடி நாட்டுமக்களின், தன்னிறைவு பெற்ற இந்தியாவின் உறுதிப்பாடு.

நண்பர்களே, நம்முடைய பல நூற்றாண்டுக்கால கௌரவம்மிக்க வரலாறு துணை நிற்கிறது. இந்தியாதன்னிறைவோடு விளங்கிய காலத்தில், தங்கக் கிளி என்று கருதப்பட்ட காலத்தில், செல்வச் செழிப்போடு இருந்த காலத்தில், அப்போது தொடர்ந்து, உலகத்தின் நலன்கள் தொடர்பான பாதையிலேயே பயணித்தது. காலம் மாறி விட்டது. நாடு, அடிமைத்தளையில் சிக்குண்டு தவித்து வந்தது. நாம் வளர்ச்சிக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தோம். இன்று பாரதம் மீண்டும், வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக பீடுநடை போட்டு வருகிறது. இந்த நிலையிலும்கூட, உலகத்தின் நலன்கள் குறித்த பாதையில், உறுதியாக இருக்கிறது. நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், இந்த நூற்றாண்டுத் துவக்க காலகட்டத்தில், Y2K சங்கடம் ஏற்பட்டது. பாரதத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், உலகத்துக்கே, இந்தச் சங்கடத்திலிருந்து வெளிவர வழிகாட்டினார்கள். இன்று நம்மிடத்திலே, சாதனங்கள் இருக்கின்றன. நம்மிடத்திலே திறன்கள் இருக்கின்றன. நம்மிடத்திலே, உலகத்தின், மிகச் சிறப்பான திறமைகள் இருக்கின்றன. நாம், சிறப்பான பொருட்களைத் தயாரிப்போம். நம்முடைய தரத்தை மேலும் நாம் மேம்படுத்துவோம். விநியோகச் சங்கிலியை மேலும் நவீனமயமாக்குவோம். இதை, நம்மால் செய்ய முடியும், இதைக் கண்டிப்பாக நாம் செய்வோம்.

நண்பர்களே, நான் என்னுடைய கண்களுக்கு முன்பாக, கட்ச் நிலநடுக்கத்தைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு திசையிலும், வெறும், வெறும் இடிபாடுகள் மட்டுமே இருந்தன. அனைத்தும் சின்னாபின்னமாகி இருந்தது. மனதில் என்ன தோன்றியது என்றால், கட்ச் பகுதியானது, மரணத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கிடக்கிறது என்று. இந்தச் சூழ்நிலையில் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை, அதாவது நிலைமையை மாற்ற முடியும் என்று. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, கட்ச் நிமிர்ந்து நின்றது. கட்ச் பயணிக்கத் தொடங்கியது. கட்ச் முன்னேறிச் சென்றது. இதுவே நம் இந்தியர்கள் அனைவரின், உறுதிப்பாடு மனதின் சக்தி. நாம் தீர்மானம் செய்தால், எந்த இலட்சியமும், சாதிக்க முடியாதது இல்லை. எந்தப் பாதையும், கடினமே கிடையாது. இன்றை காலத்தில், விருப்பமும் இருக்கிறது, வழியும் இருக்கிறது. இது தான் இந்தியாவை, தன்னிறைவு உடையதாக ஆக்கும். இந்தியாவின் மனவுறுதிப்பாடு, எப்படிப்பட்டது என்றால், அதாவது இந்தியா, தன்னிறைவு பெற்றதாக ஆக முடியும். நண்பர்களே தன்னிறைவு பெற்ற இந்தியாவின் இந்த மகத்தான சின்னம், ஐந்து தூண்களின் மீது நிற்கும். முதல் தூண், பொருளாதாரம். எப்படிப்பட்ட பொருளாதாரம் என்றால், சீராக அதிகரிக்கும் மாற்றத்தை அல்ல, ஆனால், பெரிய அளவிலான தாவலைக் கொண்டு சேர்க்கும் மாற்றம். இரண்டாவது தூண். கட்டமைப்பு. எப்படிப்பட்ட கட்டமைப்பு என்றால், நவீன இந்தியாவின் அடையாளமாக இது விளங்கும். மூன்றாவது தூண். நமது அமைப்புமுறை. எப்படிப்பட்ட அமைப்புமுறை என்றால், இது கடந்த நூற்றாண்டின் வழிமுறை நெறிமுறைகள் அல்ல, ஆனால், 21ஆம் நூற்றாண்டின் கனவுகளை மெய்ப்பிக்கவல்ல, தொழில்நுட்பம் இயக்கும், அமைப்புக்களை ஆதாரமாகக் கொண்டு விளங்கும். நான்காவது தூண், நமது மக்கட்தொகை. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி முறையில் நமது, துடிப்பான மக்கட்தொகை, இதுவே நமது பலம். தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்காக, நமது சக்தியின் பேரூற்று இது. ஐந்தாவது தூண், தேவை. நமது பொருளாதாரத்திலே, தேவை மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான சக்கரம், இதுவே சக்தி, இதை முழுமையான திறமையோடு, பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நாட்டிலே தேவையை அதிகரிக்க வேண்டி, தேவையை நிறைவேற்றவேண்டி, நமது விநியோகச் சங்கிலியில், சம்பந்தப்பட்ட அனைவரும் சக்தி பெற்றவர்களாக இருப்பது, மிகவும் அவசியமானது. நமது விநியோகச் சங்கிலி, நமது தேவை என்ற அமைப்பினை, நாம் பலப்படுத்துவோம். இதிலே, எனது நாட்டின் மண்ணின் மணம் கமழும். நமது தொழிலாளர்களின் வியர்வைச் சுகந்தம் வீசும்.

நண்பர்களே, கொரோனா சங்கடத்தை எதிர்கொள்ளும் வேளையில், புதிய உறுதிப்பாடோடு, நான் இன்று, ஒரு விசேஷமான பொருளாதார பேக்கேஜை அறிவிக்கிறேன். இந்த பொருளாதார பேகேஜ், தன்னிறைவு பாரத இயக்கம், தன்னிறைவு பாரத இயக்கத்துக்கு, மிக முக்கியமான அங்கமாகச் செயல்படும். நண்பர்களே, தற்போது அரசாங்கம், கொரோனா சங்கடத்தோடு தொடர்புடைய, பொருளாதார அறிவிப்புக்களைச் செய்தது. தவிர ரிசர்வ் வங்கியின் முடிவுகள், மேலும், இன்று அறிவிக்கப்படும் பொருளாதார பேக்கேஜ் விபரங்கள். இவற்றை இணைத்தோமென்றால், கிட்டத்தட்ட, 20 இலட்சம் கோடி ரூபாய்கள் பெறுமானமுடையன. 20 இலட்சம் கோடி ரூபாய்கள் பெறுமானமுடையன. இந்தப் பேக்கேஜ், இந்தியாவின் ஜிடிபியில், கிட்டத்தட்ட 10 விழுக்காடு மதிப்புடையவை. இந்த அனைத்தின் வாயிலாக, நாட்டின் பல்வேறு வர்க்கத்தினருக்கும், பொருளாதார அமைப்பின் கூறுகளுக்கும், 20 இலட்சம் ரூபாய்களுக்கான ஆதரவு கிடைக்கும். Support கிடைக்கும். 20 இலட்சம் ரூபாய்கள் அடங்கிய இந்த பேக்கேஜ், 2020ஆம் ஆண்டிலே, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், 20 இலட்சங்க, 2020இலே, தன்னிறைவு பாரத இயக்கத்திலே, ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தும். தன்னிறைவு பாரதம் என்ற உறுதியை மெய்ப்பிக்க, இந்த பேக்கேஜிலே, நிலம், தொழிலாள்ர்கள், ரொக்கம், மேலும் சட்டங்கள். இவை அனைத்தின் மீதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த பொருளாதார பேக்கேஜானது, நமது குடிசைத் தொழில்கள், குறுந்தொழில்கள், நமது சிறு மற்றும் இடைநிலைத்தொழில்கள், அதாவது நமது MSMEக்களுக்கானவை. இவை கோடிக்கணக்கான பேர்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை. இவை, தன்னிறைவு பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டுக்கு, பலமான ஆதாரங்கள். இந்த பொருளாதார பேக்கேஜ், நாட்டின் தொழிலாளர்களுக்கு உடைமையானது, தேசத்தின் விவசாய சகோதரர்களுக்கானது, அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு பருவநிலையிலும், நாட்டுமக்களுக்காக, இரவுபகலாக உழைத்து வருகிறார்கள். இந்தப் பொருளாதார பேக்கேஜானது, நமது தேசத்தின் மத்தியத்தட்டு மக்களுக்கானது. அவர்கள் நாணயத்தோடு வரி செலுத்துகிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பைப் பதிவு செய்கிறார்கள். இந்தப் பொருளாதார பேக்கேஜ், இந்தியத் தொழில்துறைக்கானது. அவர்கள் தான் இந்தியாவின் பொருளாதாரத் திறத்தை, மேலும் பலப்படுத்த, உறுதி பூண்டிருக்கிறார்கள். மே 13 தொடங்கி, வரவிருக்கும் சில நாட்களிலே, நிதியமைச்சர் வாயிலாக, உங்களுக்கு, தன்னிறைவு பாரதம் இயக்கத்தால் உத்வேகம் பெற்று, இந்தப் பொருளாதார பேக்கேஜின், விரிவான தகவல்கள் அளிக்கப்படும்.

நண்பர்களே, தன்னிறைவு பாரதத்தை உருவாக்க, துணிவுள்ள சீர்திருத்தங்கள் செய்யும் உறுதியோடு, இப்போது நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நீங்களுமே ஒன்றை அனுபவித்திருக்கலாம், அதாவது கடந்த ஆறு ஆண்டுகளிலே, நடைபெற்ற சீர்திருத்தங்கள், இவை காரணமாக, இன்று, சங்கடம் நிறைந்த இந்த வேளையில், இந்தியாவின் அமைப்புமுறைகள், அதிக திறன்படைத்தவையாக, அதிக வல்லமையுடையனவாக, செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இல்லையென்றால், பாரத அரசு அனுப்பும் பணமானது, முழுமையான வகையிலே ஏழைகளின் கணக்கிலே, விவசாயிகளின் கணக்கிலே, சென்று சேரும் என்று, யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள் சொல்லுங்கள்? ஆனால், இவை நடந்தன. அதுவும் எப்போது ஏற்பட்டது என்றால், நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்த நேரத்தில், போக்குவரத்து சாதனங்கள் தடைப்பட்டிருந்த வேளையில், ஜன் தன் – ஆதார் – மொபைல், ஜேஏஎம், இந்த மூன்று சக்திகளையும் ஒன்றிணைத்து, ஒரே ஒரு சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை, நாம் இப்போது பார்த்திருக்கிறோம். இப்போது அந்த சீர்திருத்தங்களின் பயணத்தை நாம் மேலும் உறுதி செய்யப் போகிறோம். புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த சீர்திருத்தங்கள், விவசாயத்தோடு தொடர்புடைய மொத்த விநியோகச் சங்கிலியில் இருக்கும். இதனால் விவசாயிக்கும் அதிகாரப் பங்களிப்பு இருக்கும். மேலும் எதிர்காலத்தில், கொரோனா போன்ற பிற சங்கடங்கள் ஏற்பட்டால், விவசாயத்தின் மீது, குறைந்த அளவிலான தாக்கமே ஏற்படும். இந்த சீர்த்திருத்தங்கள், நியாயமான வரியமைப்பு, எளிமையான தெளிவான நீதிமுறை, சிறப்பான கட்டமைப்பு, திறமையும் வல்லமையும் உடைய மனிதவளம், மேலும், பலமான நிதியமைப்பு முறைக்காக இருக்கும். இந்தச் சீர்திருத்தங்கள், வியாபாரத்துக்கு ஊக்கமளிக்கும். முதலீட்டை ஈர்க்கும் வகையிலே அமைந்திருக்கும். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் என்ற நமது உறுதிப்பாட்டினை, மேலும் பலமுடையதாகச் செய்யும்.

நண்பர்களே, தன்னிறைவு, ஆன்மபலம், இவை, தன்னம்பிக்கை வாயிலாகவே ஏற்படும். தன்னிறைவு, உலகாயத விநியோகச் சங்கிலியில், கடுமையான போட்டிக்குக்கூட நாட்டைத் தயார் செய்கிறது. மேலும், எதிர்காலத்தில் காலத்தின் கட்டாயம், பாரதம், அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும், உலக விநியோகச் சங்கிலியில் பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது. இதைப் புரிந்து கொண்டு, பொருளாதாரப் பேக்கேஜிலே, அநேக வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் நம்முடைய அனைத்துத் துறைகளிலும், திறமை மேம்பாடு அடையும், மேலும், தரமும் உறுதி செய்யப்படும்.

நண்பர்களே, இந்தச் சங்கடம் எத்தனை பெரியது என்றால், மிகப்பெரிய அமைப்புமுறைகள் எல்லாம் ஆட்டம் கண்டு விட்டன. ஆனால், இதே சூழ்நிலைகளில் நாம், நாடானது, நமது ஏழை சகோதர சகோதரிகளின், போராட்ட குணம், அவர்களின் சுயகட்டுப்பாடு ஆகியவற்றையும் கவனித்தது. குறிப்பாக, நமது தள்ளுவண்டிக்கார சகோதர சகோதரிகள், நடைபாதை வியாபாரிகள், ப்லாட்ஃபாரங்களில் பொருட்களை விற்பவர்கள், நமது தொழிலாள நண்பர்கள், வீட்டுவேலை செய்யும் சகோதர சகோதரிகள், அவர்கள் எல்லாம், இந்த வேளையில், மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். இழந்திருக்கிறார்கள். தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்பதை, அனுபவித்து, உணராதவர்கள் யார் இருப்பார்கள் சொல்ல முடியுமா? இப்போது நமது கடமை என்னவென்றால், அவர்களை சக்திபடைத்தவர்களாக ஆக்குவது தான். அவர்களின் பொருளாதார நலன்களுக்காக, சில பெரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை கவனத்திலே கொண்டு, ஏழைகள் தொழிலாளிகள், பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்தவர்கள், கால்நடை பராமரிப்பவர்கள், நமது மீனவ நண்பர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்படாத துறையினராகட்டும், அனைத்து தட்டு மக்களுக்கும், பொருளாதார பேக்கேஜிலே, சில மகத்துவமான முடிவுகள் அறிவிக்கப்படும்.

நண்பர்களே, கொரோனா சங்கடமானது நமக்கு, உள்ளூர் தயாரிப்புக்களை, உள்ளூர் சந்தைகள், உள்ளூர் விநியோகச் சங்கிலி, ஆகியவற்றின் மகத்துவத்தை நன்றாகப் புரிய வைத்திருக்கிறது. சங்கட காலத்திலே, உள்ளூர் பொருட்கள் தாம், நமது தேவையை நிறைவு செய்திருக்கின்றன. நம்மை, இந்த உள்ளூர் தயாரிப்புகள் தாம் காப்பாற்றி இருக்கின்றன. உள்ளூர் என்பது, தேவை மட்டுமல்ல, ஆனால், நம்மனைவரின் கடமையும் ஆகிறது. காலம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம், உள்ளூர் பொருட்களை நாம், நமது வாழ்க்கை மந்திரமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. நீங்கள், இன்று உலகாயத ப்ராண்டுகள் என்று, கருதும் பொருட்களும்கூட, ஒருகாலத்தில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அயல்நாட்டில் வாழும் மக்கள், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், அவை விளம்பரப்படுத்தப்பட்டவுடன், அவற்றை ப்ராண்டிங் செய்த பின், பெருமைக்குரியவையாக அவை ஆன பிறகு, அந்தப் பொருட்கள், உள்ளூரிலிருந்து உலகாயதமாக ஆகி விட்டன. அந்தப் பொருட்கள், உள்ளூரிலிருந்து உலகாயதமாக ஆகி விட்டன. ஆகையால், இன்றிலிருந்து, ஒவ்வொரு இந்தியனும், தனது உள்ளூர் பொருட்களுக்காக, ஓங்கிக்குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்காக, ஓங்கிக்குரல் கொடுக்க வேண்டும். நாம் வெறுமனே, உள்ளூர் பொருட்களை வாங்கினால் போதாது. ஆனால், அவற்றை பெருமிதம் பொங்க விளம்பரப்படுத்தவும் வேண்டும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நம்முடைய நாட்டினால், இப்படிச் செய்ய முடியும் என்று. உங்களின் முயற்சிகள் காரணமாக, ஒவ்வொரு முறையும், உங்களின்பால், எனது சிரத்தை மேலும் அதிகமாகி இருக்கிறது. நான் மிகுந்த பெருமையோடு ஒரு விஷயத்தை உணர்கிறேன், நினைவில் கொள்கிறேன். நான் உங்களிடத்திலே, நாட்டிலே, கதராடைகளை வாங்க, விண்ணப்பித்திருந்தேன். நான் மேலும் கூறியிருந்தேன், அதாவது நாட்டின் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றேன். நீங்களே பாருங்கள், மிகவும் குறைந்த காலகட்டத்திலே, கதராடைகள் மற்றும் கைத்தறிப் பொருட்கள், இரண்டின் விஷயத்திலுமே, தேவை மற்றும் விற்பனை, சாதனை படைத்த ஒன்றாக மாறியது. இதுமட்டுமல்ல, இதை நீங்கள் தான், பெரிய ப்ராண்டாகவும் மாற்றினீர்கள். மிகவும் சிறிய முயற்சி தான் இது. ஆனால், நல்ல பலன் கிடைத்தது, மிகவும் நல்ல பலன் கிடைத்தது.

நண்பர்களே, அனைத்து வல்லுனர்களும் கூறுகிறார்கள், அறிவியலார்கள் கூறுகிறார்கள், அதாவது கொரோனா நீண்ட காலம் நமது வாழ்க்கையின் அங்கமாக இருக்கப் போகிறது என்று. ஆனால் இதோடு கூடவே, நாம் சும்மா இருக்க முடியுமா சொல்லுங்கள்? நம்முடைய வாழ்க்கை, வெறும் கொரோனாவை, சுற்றியே அமைந்திருக்க விடலாமா கூறுங்கள்? நாம் முகக்கவசம் அணிவோம், ஒரு மீட்டர் இடைவெளியை நாம் கடைப்பிடிப்போம். ஆனால், நமது இலட்சியங்களை, தொலைந்து போக விட மாட்டோம். ஆகையால், முழு ஊரடங்கின் நான்காவது நிலை, லாக்டவுன் ஃபோர், முழுமையான வகையிலே, புதிய வடிவம் தாங்கி வரப் போகிறது. புதிய விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கும். மாநிலங்களிலிருந்து நமக்குக் கிடைத்துவரும் ஆலோசனைகள், அவற்றை ஆதாரமாகக் கொண்டு, லாக்டவுன் ஃபோர், இதோடு தொடர்புடைய தகவல்களும் உங்களுக்கு, மே 18க்கும் முன்பாகவே கிடைத்து விடும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, அதாவது விதிமுறைகளைப் பின்பற்றும் அதே வேளையில், நாம், கொரோனாவோடு போராடுவோம், மேலும், முன்னேறவும் செய்வோம்.

நண்பர்களே, மூதுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், சர்வவி, ஆத்மவசம் சுகம். அதாவது, நமது வசம் என்ன இருக்கிறதோ, எது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அதுதான் சுகம். தன்னிறைவு, நமக்கு சுகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கும் அதே வேளையில், சக்திபடைத்தவர்களாகவும் ஆக்குகிறது. 21ஆம் நூற்றாண்டை, பாரதத்தின் நூற்றாண்டாக ஆக்கும் நமது பொறுப்பு, தன்னிறைவு பாரதமாக ஆக்கும் நமது சபதத்தினால் மட்டுமே நிறைவேறும். இந்தப் பொறுப்புக்கு, 130 கோடி நாடுமக்களின், பிராணசக்தியால் மட்டுமே ஆற்றல் கிடைக்கும். தன்னிறைவு பாரதத்தின் இந்த யுகம், இந்தியர்களான நமக்கு, நூதனமான சங்கல்பகாகவும் ஆகும், நவீனமான வேளையுமாகும். இப்போது ஒரு புதிய பிராணசக்தி, புதிய சங்கல்பசக்தி, இதை மனதில் தாங்கி, நாம் முன்னெற வேண்டும். கருதுக்கள் சிந்தனைகளை, கடமையுணர்வோடு, நாம் செய்வோம். கடமையுணர்வின் உச்சங்களை நாம் எட்டுவோம். திறன்களே மூலதனமாகட்டும். அப்போது, தன்னிறைவு படைத்த பாரதத்தை உருவாக்குவதை, யாரால் தடுக்க முடியும்? நாம் இந்தியாவை, தன்னிறைவு படைந்த நாடாக ஆக்க முடியும். நாம் இந்தியாவை, தன்னிறைவு படைத்தாக ஆக்கியே தீருவோம்.

இந்த உறுதிப்பாட்டு உணர்வோடு, இந்த நம்பிக்கையுணர்வோடு, நான், உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள், உங்கள் உடல்நலனை, உங்கள் குடும்பத்தார் சுற்றத்தார் ஆகியோரை, நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன் (ஏஐஆர்., சென்னை வானொலி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe