வரும் மே 31 வரை ரயில் இயக்கம் வேண்டாம்: தமிழக முதல்வர் வேண்டுகோள்!

Published:

Chief Secretariat
Chief Secretariat

வரும் மே 31ம் தேதி வரை தமிழகத்துக்கு ரயில் இயக்கம் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய ரயில்வே துறை, தில்லி-சென்னை மற்றும் சென்னை-தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 13-ந்தேதியில் (இன்று) இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. 11-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 31-ந்தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (மே 14 மற்றும் 16-ந்தேதி) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் தவிர, இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரெயிலில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்கள் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து தான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.- என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img