
மதுரை நகரில் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டும், வியாபாரிகள் எதிர்பார்த்தப்படி வணிகம் நடைபெறவில்லை என,பல வணிகர்கள் கவலை தெரிவித்தனர்.
தினசரி நடைபெறும் வணிகமானது, சம்பள ஆட்களுக்கும், வாங்கிய பொருட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மின்சார கட்டணம், கடை வாடகைக்கு கடன் வாங்கும் நிலைதான் ஏற்படுகிறது என்றும். இதற்கு காரணம் போக்கு வரத்து இல்லாதது தான் காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், அரசு எவ்வளவு தளர்வுகள் அளித்தாலும், போலீஸார் கெடுபிடியும் வணிகக் குறைவுக்குக் காரணம் என்றார் வியாபாரி முருகப்பன். கோமதிபுரத்தைச் சேர்ந்த குமார் கூறிய போது… மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வயதான இருவர் மருந்துகள் வாங்கிக் கொண்டு திரும்பினர் அப்போது, மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் பஸ்நிறுத்தம் அருகே ஆட்டோவை மறித்து போலீஸார் ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற காவல்துறையினரின் கெடுபிடியால் பல வியாபாரிகள் கடையை திறக்க அஞ்சுகின்றனர்.

மதுரை அண்ணாநகர், கருப்பாயூரணி, நான்குவழிச்சாலை, சிவகங்கை ரோடு, சொக்கிகுளம், தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறந்திருந்தாலும், பொதுமக்களின் வருகை மிக குறைவாகவே உள்ளது. அதே சமயத்தில் இறைச்சி கடைகள், மருந்தகங்களில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஆகவே, அரசு தளர்வுகள் அறிவித்தாலும், போக்குவரத்து இன்மையாலும், போலீஸாரின் கெடுபிடியே வணிகக் குறைவுக்கு காரணம் என்கின்றனர் வணிகர்கள் பலர்.

இந்நிலையில் மதுரையில் வியாழன் முதல் ஜவுளி மற்றும் சூ மார்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது!
மதுரை மாவட்டத்தில் மே.14 வியாழக்கிழமை நாளை முதல் ஜவுளி மற்றும் துணிக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி, துணிக்கடைகள், சூ மார்ட் ஆகியவை வழக்கம் போல செயல்படலாம் என்றும், பணிக்கு வரும் வேலையாட்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும், கடைகளில் கட்டாயம் கிருமி நாசினி பயன்படுத்துவதுடன், தகுந்த இடைவெளி விட்டு, அரசு அறிவித்துள்ளபடி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே, கடைகளை திறக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை