
கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அரசுப்பேருந்துப் போக்குவரத்தை கேரள அரசு இயக்காமல் இருந்தது. மீண்டும் அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது.
தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து குறைந்த நேரத்தில், குறைந்த அளவு பேருந்துகளை புதன்கிழமை இயக்கினர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கேரள அதிகாரிகள் வருத்தமடைந்துள்ளனர். புதன்கிழமையன்று ஏறக்குறைய 1300 பேருந்துகளை மாவட்டங்களுக்குள்ளே மட்டும் கேரள அரசு இயக்கியது.
காலை 7 மணி முதல் 11 வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நடத்துனர் அமரும் இடத்தில் பயணிகளுக்காக சானிடைசரும் வைக்கப்பட்டது.
பயணிகள் தேவைப்பட்டால் சானிடைசரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தீவிரமான சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கையைப் பொறுத்து 24 முதல் 28 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டது. எந்த பயணியும் நின்று கொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இத்தனை கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பேருந்து இயக்கிய முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டது அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாளான புதன்கிழமை மட்டும கேரள அரசுப்பேருந்துக்கு கிடைத்தது ரூ.35 லட்சம் ஆகும்.
இதில் ஊழியர்கள் ஊதியம், டீசல், காப்பீடு, சானிடைசர் என மொத்தம் கி.மீ ஒன்றுக்கு பேருந்து இயக்கச் செலவு ரூ.45 வரை செலவானது. குறைவான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கி.மீ ரூ.16 மட்டுமே கிடைத்தது. இதனால் ஒரேநாளில் அரசுக்கு ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.