வயலில் கிடைத்த வைரங்கள்… கர்னூலில் வைரக்கற்கள் மக்களுக்குத் தட்டுப் பட்டு.. அதிர்ஷ்டக் காரர்களாக்கியிருக்கிறது. இன்றைய பரபரப்பு செய்தி… இதுதான்!
கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலம் பகிடிராயி, பொல்லவானிபல்லெ கிராமங்களின் வயல்களில் இரண்டு வைரக்கற்கள் கிடந்துள்ளன. மூன்று நாட்கள் முன்பு பொல்லவானிபல்லெ கிராமத்தில் ஆடு மேய்ப்பவருக்கு ஒரு வைரக்கல் கிடைத்தது. இந்த வைரத்தை 50 ஆயிரம் ரூபாயும், 2 துலாம் தங்கமும் கொடுத்து ஒரு வியாபாரி வாங்கியுள்ளார்.
அதேபோல் பகிடிராயி கிராமத்தில் ஒரு விவசாய கூலிக்கு வைரக்கல் கிடைத்தபோது மூன்றரை இலட்சத்திற்கு ஒரு வியாபாரி அந்த வைரக்கல்லை வாங்கியதாக தெரிகிறது. அதனால் அந்த கிராமங்களின் மக்கள் தற்போது வயல்களிலும் சுற்றுப்புறங்களிலும் வைரக்கற்களைத் தேடித்தேடி படை எடுக்கிறார்கள். இன்றைய தங்கள் வாழ்க்கையை வைரத்தைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.
மிக அதிக மதிப்புள்ள வைரங்களை மிகக்குறைந்த விலைக்கே அல்லா பக்ஷா என்ற வியாபாரி வாங்கியிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. வைரங்களை வியாபாரிகள் வாங்கினாலும் அரசாங்க அதிகாரிகள் கண்டும் காணாதது போல் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளை வியாபாரிகள் நன்கு கவனித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்குக் கிடைக்கும் வைரங்கள் அரசாங்க கஜானாவைச் சேரவேண்டும் என்கிறார்கள் பலர்.
எது எப்படியோ இப்போது செய்திகளில் வைரக் கற்கள் இடம்பெற்று விட்டன.